கடந்த சில தினங்கள் முன் தென்காசி மாவட்டம் திப்பனம்பட்டி அருகே உள்ள வினைதீர்த்த நாடார்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் 3 ஆம் வகுப்பு பயிலும் மாணவி முதல்வருக்கு கடிதம் எழுதி இருந்தார். அதில், தங்கள் பள்ளியில் உள்ள கட்டிடத்தில் இட வசதி இல்லை. பள்ளியின் கட்டிடத்தை மேம்படுத்தி தரவேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில் இன்று தென்காசியில் அரசின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதற்காக நேற்று இரவு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து 'பொதிகை எக்ஸ்பிரஸ்' ரயிலில் சலூன் கோச்சில் தென்காசி புறப்பட்டிருந்தார்.
காலை தென்காசி கணக்குப்பிள்ளை வலசை பகுதியிலுள்ள தனியார் பள்ளி வளாகத்தில் நடந்த நலத்திட்ட விழாவில் சுமார் 182 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன் பிறகு மேடையில் பேசிய முதல்வர், “வினைதீர்த்த நாடார்பட்டி ஊராட்சி ஒன்றிய பள்ளியில் 3 ஆம் வகுப்பு படிக்கும் ஆராதனா என்ற மாணவி எனக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தார். அக்கடிதத்தில் தான் படிக்கும் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டித் தரவேண்டும் எனக் கேட்டிருந்தார். அதைப் படித்ததும் எனக்குப் பெருமையாக இருந்தது. எத்தகைய நம்பிக்கையை அவர் என் மீது வைத்திருந்தால் அவர் இக்கடிதத்தை எனக்கு எழுதி இருப்பார் என நினைத்து மகிழ்ச்சி அடைந்தேன்.
ஆராதனாவின் கோரிக்கை ஏற்கப்பட்டது என்பதை இக்கூட்டத்தில் நான் தெரிவிக்கிறேன். அதற்கு முதற்கட்டமாக 35 லட்சத்து 50 ஆயிரம் செலவிலே இரண்டு வகுப்பறைகள் கட்டப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன். இவ்வளவு சிறு வயதில் நம்பிக்கையுடன் எனக்கு கடிதம் எழுதிய ஆராதனா அதே பள்ளியில் படித்து எதிர்காலத்தில் சிறப்பான நிலையை அடைய வேண்டும் என அந்தச் சிறுமியை வாழ்த்துகிறேன்” எனக் கூறினார்.