Skip to main content

பெயரளவில் நடவடிக்கையா? வழக்குப்பதிவு செய்ய வேண்டும்; தேவைப்பட்டால் கைது செய்து விசாரிக்க வேண்டும்: ராமதாஸ்

Published on 26/03/2018 | Edited on 26/03/2018

பல்கலைக்கழகங்களில் நடந்த ஊழல்கள் பற்றிய விரிவான குற்றச்சாற்றுப் பட்டியலை ஆளுனர்  பன்வரிலால் புரோகித்திடம் பாட்டாளி மக்கள் கட்சி விரைவில் வழங்கும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். மேலும், பெயரளவில் சில நடவடிக்கைகளை எடுத்து விட்டு, ஊழலை மூடி மறைத்துவிடக்கூடாது. ஊழல் குற்றச்சாற்றுக்கு உள்ளான அனைத்து துணைவேந்தர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்; தேவைப்பட்டால் அவர்களை கைது செய்து விசாரிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்களில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் அண்ணா பல்கலைக்கழகம், டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் செய்யப்பட்ட ஊழல்கள் தொடர்பாக அவற்றின் முன்னாள் துணைவேந்தர்கள் இல்லத்தில் கையூட்டுத் தடுப்புப் பிரிவு சோதனை நடத்தியுள்ளது.

 

banwarilal purohit


 

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் இராசாராம் மற்றும் ஊழலில் அவருக்கு   உடந்தையாக இருந்தவர்களுக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் ரூ.20 கோடி மதிப்புள்ள 65 சொத்து ஆவணங்களும், சட்டப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வணங்காமுடி மற்றும் அவரைச் சார்ந்தவர்களின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனைகளில் ரூ.95 லட்சம் மதிப்புள்ள 74 ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கண்டுபிடிக்கப்பட்ட சொத்துக்களின் மதிப்பே இவ்வளவு எனும் போது அவர்கள் ஊழல் செய்து சேர்த்த சொத்துக்களின் மொத்த மதிப்பு எவ்வளவு இருக்கும்? என்பதை நினைக்கவே மலைப்பாக இருக்கிறது. மாதம் ரூ. 2 லட்சம் மட்டுமே ஊதியம் பெற்ற துணை வேந்தர்களிடமிருந்து இவ்வளவு சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டிருப்பதிலிருந்தே, அவர்கள் எந்த அளவுக்கு ஊழல் செய்து சொத்துக்களை குவித்திருப்பார்கள் என்பதை யூகிக்க முடிகிறது.
 

ஊழல் துணைவேந்தர்களுக்கு எதிரான இந்த நடவடிக்கையை வரவேற்கத்தக்கது என்றாலும், ஊழலில் உலக சாதனை படைத்த துணைவேந்தர்களுக்கு எதிராக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது  பல்வேறு யூகங்களை ஏற்படுத்துகிறது. தமிழ்நாட்டில் கடந்த பத்தாண்டுகளில் துணைவேந்தர்களாக இருந்தவர்களில் ஓரிருவரைத் தவிர மற்ற அனைவருமே ஊழல் குற்றச்சாற்றுகளுக்கு உள்ளானவர்கள் தான். பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி கையூட்டு வாங்கும் போது, கையும் களவுமாக சிக்கிக் கொண்டார்; மற்றவர்கள் ஆட்சியாளர்களின் உதவியுடன் பாதுகாப்பாக வலம் வருகின்றனர். இதைத் தவிர பல்கலைக்கழக துணைவேந்தர்களின் ஊழல் விளையாட்டில் வித்தியாசங்கள் இல்லை.
 

தமிழ்நாட்டில் அதிக ஊழல்கள் நடைபெற்ற முதல் 5 பல்கலைக்கழகங்கள் அண்ணா பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆகியவை தான். இவற்றில் பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார். அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் இராசாராம் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் முனைவர் ஜேம்ஸ் பிச்சை செய்த ஊழல்களும், அதன்மூலம் குவித்த சொத்துகளும் கணக்கிலடங்காதவை.
 

பாரதியார், பெரியார் ஆகிய இரு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தராக பணியாற்றிய முனைவர் சுவாமிநாதன் உரிய தகுதி இல்லாமலேயே அந்தப் பதவிகளுக்கு வந்தவர். இரு பல்கலைக்கழகங்களிலும் ஊழல் செய்வதையே முழுநேரத் தொழிலாகக் கொண்டவர். அதற்காக புதிய, புதிய வழிமுறைகளைக் கண்டறிந்தவர். இவருடைய ஊழலுக்கு உடந்தையாக இருந்து சிக்கிக் கொண்டதால் அப்பல்கலையின் முன்னாள் பதிவாளர் அங்கமுத்து தற்கொலை செய்து கொண்டார். இவர் மீது ஏராளமான வழக்குகளை கையூட்டுத் தடுப்புப் பிரிவு பதிவு செய்திருக்கிறது. இவரின் ஊழல்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் ஆகியோர் துணையாக மட்டுமின்றி பங்குதாரர்களாகவும் இருந்ததாக கூறப்படுகிறது. எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகங்களில் நடைபெற்ற ஊழல்கள் தொடர்பாக அவரது வீட்டில் மத்திய வருமானவரித்துறை சோதனை நடத்தியது. ஆனாலும், அவர் இன்னும் பணியில் நீடிக்கிறார்.

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் கல்யாணி மதிவாணன் தடாலடியாக ஊழல் செய்தால், இப்போதைய துணைவேந்தர் செல்லத்துரை விஞ்ஞான முறையில் ஊழல் செய்வதாக அப்பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பலர் புகார் அனுப்பியுள்ளனர். சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்த தாண்டவன் ஊழல் சர்வாதிகாரி என்று பெயரெடுத்தவர். வெளிப்படையாக  ஊழல் செய்தது மட்டுமின்றி, அதை எதிர்த்தவர்களை மிரட்டிப் பணியவைக்கும் அளவுக்கு அவருக்கு ஆட்சியாளர்களிடம் அமோக செல்வாக்கு இருந்தது. பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர்களாக மீனா, முத்துக்குமார் ஆகியோர் அடுத்தடுத்து பதவி வகித்த போது தான் அந்நிறுவனம் சீரழிவுப் பாதையில் வேகமாக பயணித்தது. தமிழகத்தின் முன்னாள் மற்றும் இந்நாள் துணைவேந்தர்களில்   99 விழுக்காட்டினர் மீது ஊழல் குற்றச்சாற்றுகளும், அவற்றுக்கான ஆதாரங்களும் இருக்கும் நிலையில் அவற்றின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்காமல் கையூட்டுத் தடுப்புப் பிரிவு வேடிக்கைப் பார்ப்பது ஏன்?

 

ramadoss


 

பல்கலைக்கழக ஊழல்கள் தொடர்பான விசாரணைகள் துணைவேந்தர்களை மட்டும் மையப்படுத்தியதாக  இருந்து விடக் கூடாது. கடந்த 10 ஆண்டுகளில் நியமிக்கப்பட்ட பல்கலைக்கழக துணைவேந்தர்களின் தகுதிகள் என்ன? அவர்கள் அந்த பதவியைப் பிடிக்க யார் யாருக்கு எவ்வளவு கையூட்டு கொடுத்தனர்? பணி நியமனங்கள், கொள்முதல்கள், கட்டுமான ஒப்பந்தங்கள் ஆகியவற்றில் ஊழல் செய்து துணை வேந்தர்கள் ஈட்டிய பணத்தில் உயர்கல்வித்துறை செயலாளர்கள், உயர்கல்வித்துறை அமைச்சர்கள் ஆகியோருக்கு அளிக்கப்பட்ட பங்கு எவ்வளவு? என்பதையும் கண்டறியும் வகையில் விசாரணையின் வரம்பை விரிவுப்படுத்த வேண்டும். கையூட்டு பெற்று செய்யப்பட்ட அனைத்து பணி நியமனங்களையும் ரத்து செய்வது குறித்தும் தமிழக அரசு தெளிவான கொள்கை முடிவை விரைவாக எடுக்க வேண்டும்.
 

உயர்கல்வி நிறுவனங்களின் ஊழல் தொடர்பாக பெயரளவில் சில நடவடிக்கைகளை எடுத்து விட்டு,  ஊழலை மூடி மறைத்துவிடக்கூடாது. ஊழல் குற்றச்சாற்றுக்கு உள்ளான அனைத்து துணைவேந்தர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்; தேவைப்பட்டால் அவர்களை கைது செய்து விசாரிக்க வேண்டும்.  பல்கலைக்கழகங்களில் நடந்த ஊழல்கள் பற்றிய விரிவான குற்றச்சாற்றுப் பட்டியலை ஆளுனர்  பன்வரிலால் புரோகித்திடம் பாட்டாளி மக்கள் கட்சி விரைவில் வழங்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.   


 

சார்ந்த செய்திகள்