சேலம் மாவட்டம் ஏற்காட்டுக்கு புதிய பேருந்து நிலையத்திலிருந்து தனியார் பேருந்து ஒன்று சென்றது. பின்னர் ஏற்காடு பேருந்து நிலையத்திலிருந்து நேற்று மாலை 6:00 மணியளவில் சேலத்தை நோக்கி மீண்டும் வந்து கொண்டிருந்தது. மாலை நேரம் என்பதால் பேருந்தில் அதிகப்படியான பயணிகள் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் ஏற்காடு மலையின் 11 வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் வந்து கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கவிழ்ந்தது. மேல்பகுதியில் இருந்து அடுத்த கொண்டை ஊசி வளைவு உள்ள பகுதி சாலை வரை உருண்டோடியது. இதில் சுமார் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த ஏற்காடு காவல் நிலைய போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு ஆம்புலன்ஸ்கள் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், சேலம் மாவட்ட ஆட்சியரைத் தொடர்பு கொண்டு காயமடைந்தவர்களுக்கு தேவையான சிகிச்சைகள் அளிக்கப்படுவதை உறுதி செய்ய உத்தரவிட்டேன் என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிகள் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று வழங்கப்படும் எனவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.