திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஓம்சக்தி கோயில் பக்தர்கள் 16 பேர் ஒரு வேனில் ராமேஸ்வரம் சென்றுள்ளனர். அதே போல திருவள்ளூர் மற்றும் சென்னையிலிருந்து 22 ஐயப்ப பக்தர்கள் பிள்ளையார்பட்டிக்கும், திருக்கடையூரில் இருந்து ஒரு காரில் ராமநாதபுரம் நோக்கி சென்ற 6 பேர் என அனைவரும் புதுக்கோட்டை மாவட்டம் நமணசமுத்திரம் காவல் நிலையம் எதிரே உள்ள தேசிய நெடுஞ்சாலை ஓர டீ கடையில் நிறுத்தி டீ குடித்துக் கொண்டிருந்தனர்.
அதிகாலை நேரத்தில் அரியலூரில் இருந்து சிவகங்கைக்கு சிமென்ட் மூட்டைகள் ஏற்றிச் சென்ற ஈச்சர் லாரி ஓட்டுனர் திருவையாறு மணிகண்டனின் கட்டுப்பாட்டை இழந்து டீ கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தவர்கள், அவர்கள் வந்த வேன்கள், கார், அதே பகுதியை சேர்ந்தவர்களின் பைக் ஆகியவை மீது வேகமாக மோதிய விபத்தில் லாரிக்குள் சிக்கி பலத்த காயமடைந்து சாந்தி, ஜெகநாதன், சுரேஷ், சதீஷ், கோுலகிருஷ்ணன் ஆகிய 5 பேர் உயிரிழந்தனர்.
உள்ளூர் மக்கள் உதவியுடன் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் கிரேன், பொக்லைன் போன்ற இயந்திரங்கள் உதவியுடன் விபத்தில் சிக்கியிருந்தவர்களை மீட்டனர். இந்த விபத்தில் டீ கடைக்காரர், லாரி ஓட்டுநர், பக்தர்கள், 3 வயது குழந்தை என 19 பேர் படுகாயமடைந்தனர். இவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார். அத்தோடு விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.