சென்னை மாநகரில் துப்புரவுப் பணியில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் இரவு நேரங்களிலும் தூய்மைப் பணியில் ஈடுபடுவது வழக்கம். அந்த வகையில் சென்னை திருவான்மியூர் ஆர்டிஓ அலுவலகம் இருக்கக்கூடிய பகுதியில் பணியாளர் பெண்கள் சிலர் அதிகாலை 3 மணி அளவில் வழக்கம்போல் துப்புரவுப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்பொழுது ஐடி பணியை முடித்துவிட்டு காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்த அஸ்வின் என்ற நபர் தூக்கக் கலக்கத்தில் சிவகாமி என்ற பெண் துப்புரவுப் பணியாளர் மீது மோதி உள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சிவகாமி உயிரிழந்தார்.
அப்போது அவருடன் பணியாற்றிய சக பணியாளர் பெண்கள் கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. தூய்மைப் பணியாளர் சிவகாமிக்கு 3 குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சாலை விபத்தில் உயிரிழந்த தூய்மைப் பணியாளரின் குடும்பத்தினருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்து மற்றும் நிதியுதவி அறிவித்துள்ளார்.
இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “இன்று அதிகாலை சென்னை, திருவான்மியூர், அடையாறு மண்டலம், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகில் நிகழ்ந்த சாலை விபத்தில் சென்னை பெருநகர மாநகராட்சியில் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வந்த சிவகாமி (வயது 42) என்பவர் பணியிலிருந்தபோது அவர் மீது வாகனம் மோதியதால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
ஒக்கியம் துரைப்பாக்கத்திலுள்ள கண்ணகி நகரில் தன் கணவர், மகள் மற்றும் மகனுடன் வசித்து வந்த சிவகாமி இந்த சாலை விபத்தில் உயிரிழந்தது நமக்கெல்லாம் பெரும் வேதனை அளிக்கின்றது. அவரது குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு அவரது குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூபாய் ஐந்து இலட்சம் வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.