தி.மு.க. மகளிர் உரிமை மாநாடு, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நாளை (14.10.2023) மாலை நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் சுப்ரியா சுலே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினர் தோழர் சுபாஷினி அலி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினரும் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் பொதுச் செயலாளருமான ஆனி ராஜா உள்ளிட்ட இந்தியா கூட்டணியில் உள்ள 9 பெண் தலைவர்கள் பங்கேற்கிறார்கள். இதனையொட்டி தேசியத் தலைவர்கள் சென்னை வரவுள்ளதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அதே சமயம் மாநாட்டிற்காக பிரம்மாண்ட மேடை, பந்தல் அமைப்பது என வேலைகள் படு தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாநாட்டிற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் ஏற்பாடுகளை இன்று (13.10.2023) காலை முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார். அப்போது அரங்குகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள வசதிகள், இருக்கைகள் குறித்து செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் என்னென்ன என்பதை முதல்வர் கேட்டறிந்தார்.
இந்நிலையில் தி.மு.க. மகளிர் உரிமை மாநாட்டில் கலந்துகொள்ள சென்னை வந்துள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி எம்.பி., காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோரை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வரவேற்றார். மேலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் நேரில் சென்று சோனியா காந்தி, பிரியங்கா காந்தியை வரவேற்றார்.