Skip to main content

“பாஜகவிற்கு சரியான பாடம் புகட்ட மக்கள் தயாராக இருக்கிறார்கள்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்

Published on 29/06/2023 | Edited on 29/06/2023
cm mk stalin says bjp parliament election people take lesson

 

பாஜகவிற்கு சரியான பாடம் புகட்ட மக்கள் தாயாராக இருக்கிறார்கள் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக நிர்வாகி கும்மிடிப்பூண்டி வேணு இல்லத் திருமண விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், “பிரதமராக இருக்கக் கூடிய மோடி இரண்டு நாட்களுக்கு முன்பு உரையாற்றுகையில் திமுக குடும்ப அரசியல் செய்வதாக கூறி உள்ளார். உண்மை தான் திமுக என்பது குடும்பம் குடும்பமாக இருக்கும். இதனை சொன்னதற்காக மோடிக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மோடி அதோடு இல்லாமல் குடும்பம் குடும்பமாக அரசியல் நடத்திக் கொண்டு இருக்கிறார்கள். வளர்ச்சி அடைந்து கொண்டு இருக்கிறார்கள் என்று பேசி இருந்தார்.

 

அறிஞர் அண்ணா அவர்கள் திமுகவை தொடங்கிய போது கழக தோழர்களை எல்லாம் தம்பி தம்பி என்று தான் உரிமையோடு அழைத்தார். கலைஞர் கழக தோழர்கள் உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள அனைவரையும் உடன்பிறப்பு என்று அழைத்தார். ஆகவே இது குடும்ப அரசியல் தான். திமுக மாநாடுகளை பல்வேறு வகைகளில் நடத்தி இருக்கிறோம். 3 நாட்கள், 4 நாட்கள் நடத்தி இருக்கிறோம். இந்த மாநாட்டிற்கெல்லாம் குடும்பம் குடும்பமாக தான் வர தலைவர் அழைப்பு விடுவார். குடும்பத்தினரோடு வருபவர்களைக் கண்டு கலைஞர் மகிழ்ச்சி அடைவார். போராட்டத்திற்கு கூட குடும்பமாக சிறை சென்றுள்ளோம். பல கொடுமைகளை அனுபவித்து இருக்கிறோம்.

 

ஆனால் இன்று பிரதமராக இருக்கக் கூடிய மோடி, திமுகவிற்கு வாக்களித்தால் கலைஞர் குடும்பம் தான் வளர்ச்சி அடையும் என்று பேசி இருக்கிறார். கலைஞரின் குடும்பம் என்பதே தமிழ்நாடு தான்; தமிழர்கள் தான். 50 ஆண்டு காலமாக திராவிட இயக்கம்தான் அட்சி பொறுப்பில் இருந்திருக்கிறது. இந்த  50 ஆண்டு கால ஆட்சியில் தமிழகம் வளர்ச்சி அடைந்துள்ள நிலையை எல்லாம் பார்த்துவிட்டு பிரதமர் மோடி பேச வேண்டும் என்பது தான் என்னுடைய வேண்டுகோள். நவீன தமிழ்நாட்டை உருவாக்கியவர் கலைஞர் தான். இன்றைக்கு நூற்றாண்டு விழாவை அவருக்கு கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம். அவ்வளவு பெரிய சாதனை பட்டியல் இருக்கிறது. அந்த வழியில் தான் ஆறாவது முறையாக திராவிட மாடல் ஆட்சி நடத்திக் கொண்டு இருக்கிறோம்.

 

குடும்பம் குடும்பமாக என்று சொல்லிக் கொண்டு இருப்பவர்களுக்கு, நான் சொல்லிக் கொள்வது, ஒரு வருடம் மிசாவில் சிறையில் இருக்கும் போது குடும்பத்தினர், உறவினர்கள் வந்து சிறையில் சந்திப்பது வழக்கம். ஆனால் அனுமதி மறுக்கப்பட்டது. கலைஞர் அறிக்கை விட்டார்.  அதில் உண்ணாவிரதம் இருப்போம் என்று அதன் பின்னர் சிறைத்துறையினருக்கு அச்சம் ஏற்பட்டு என்னை மட்டும் சந்திக்க அனுமதி அளித்தார்கள். ஆனால் கலைஞர் சிறையில் உள்ள அனைவரையும் அவர்களது குடும்பத்தினர் சந்திக்க அனுமதி அளித்தால் தான் என்னை சந்திப்பதாக தெரிவித்தார். இதையடுத்து அனைவருக்கும் அனுமதி கிடைத்தது. கழக தோழர்கள் அனைவரையும் தன் குடும்பமாக நினைத்தவர் கலைஞர்.

 

கடந்த 23 ஆம் தேதி பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இதையடுத்து பிரதமருக்கு இந்த கூட்டம் குறித்து ஒரு அச்சம் ஏற்பட்டுள்ளது. பாஜக ஆளும் மணிப்பூர் கடந்த 50 நாட்களாக எரிந்து கொண்டு இருக்கிறது. 150 பேர் இதுவரை பலியாகி இருக்கிறார்கள். சுமார் 1000 பேர் மாநிலத்தை விட்டு வெளியேறி இருக்கிறார்கள். இதுவரை பிரதமர் அங்கு செல்லவில்லை. 50 நாட்கள் கழித்து அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தி இருக்கிறார்கள். இதுதான் பாஜகவின் லட்சணம். பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும் என்று பிரதமர் பேசி இருக்கிறார். நாட்டின் சட்ட ஒழுங்கை சீர்குலைக்க வேண்டும் மத கலவரத்தை ஏற்படுத்த வேண்டும். ஒரு நாட்டில் இரண்டு விதமான சட்டங்கள் இருக்கக் கூடாது என்கிறார். நாட்டில் மத பிரச்சனையை அதிகமாக்கி வெற்றி பெற்று விடலாம் என்று கருதிக் கொண்டு இருக்கிறார். நாடாளுமனற தேர்தலில் பாஜகவிற்கு சரியான பாடம் புகட்ட மக்கள் தயாராக இருக்கிறார்கள்” எனப் பேசினார்

 

 

சார்ந்த செய்திகள்