தொடர் கனமழையால் கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டக்கை என்ற இடத்தில் நேற்று (30.07.2024) நள்ளிரவு 1 மணியளவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் அதிகாலை 4 மணியளவில் சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் சூரல்மலா என்ற இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த இரு நிலச்சரிவில் சுமார் 500 வீடுகள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிக்கி உள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலச்சரிவில் சிக்கி குழந்தைகள் உட்பட பலர் உயிரிழந்தனர்.
நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்கள் சூரல்மலா பகுதியில் தரையிறக்கப்பட்டு இரண்டாவது நாளாக இன்றும் (31.07.2024) மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கிடையே இந்த நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதையுண்டு இதுவரை 163 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த நிலச்சரிவில் சிக்கி 216 பேரைக் காணவில்லை எனக் கேரள அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த கல்யானகுமார் என்பவரின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்து நிதியுதவி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள இரங்கல் செய்தியில், “கேரள மாநிலம், வயநாடு மாவட்டம், சூரல்மலையில் பணியாற்றி வந்த நீலகிரி மாவட்டம், பந்தலூர் வட்டம், சேரங்கோடு 1 கிராமம், கொல்லிஅட்டி, அம்பேத்கர் நகரைச் சேர்ந்த முருகையா என்பவரது மகன் கல்யாணகுமார் (வயது 52) நேற்று (30.07.2024) அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன். இச்சம்பவத்தில் உயிரிழந்த கல்யாணகுமாரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், காலம்சென்ற கல்யாணகுமாரின் குடும்பத்தினருக்கு மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தை சேர்ந்த காளிதாஸ் என்பவர் இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த நிலையில் தமிழக முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ளதோடு 3 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்திருந்தார். இத்தகைய சூழலில் தான் கல்யாண்குமார் உடல் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டது. வயநாடு சூரல்மலா பகுதியில் உள்ள கோவிலில் பூசாரியாக இருந்து வந்தார். கல்யாண்குமார் உயிரிழந்ததையடுத்து வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்த தமிழர்கள் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.