ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் பனப்பாக்கம் தொழிற்பூங்காவில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 9 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு மற்றும் 5 ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகன உற்பத்தி ஆலை அமைப்பதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (28.09.2024) அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் துரைமுருகன், ஆர். காந்தி, டி.ஆர்.பி. ராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஜெகத்ரட்சகன், சட்டமன்ற உறுப்பினர்கள்ஏ.எம். முனிரத்தினம், ஜெ.எல். ஈஸ்வரப்பன் மற்றும் பி. கார்த்திகேயன், டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் என். சந்திரசேகரன், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அரசு செயலாளர் வி.அருண் ராய். ராய், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெ.யு.சந்திரகலா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், “டாடா குழுமத்தின் தலைவர் சந்திரசேகரன் இந்த விழாவில் பங்கேற்று இருப்பது நமக்கெல்லாம் கூடுதல் மகிழ்ச்சி ஏற்படுத்தியிருக்கிறது. நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அவர். உலகப் புகழ்பெற்ற நிறுவனத்தின் தலைமைப் பதவியில் இருப்பது அவருக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டுக்கே இது கிடைத்திருக்கக்கூடிய பெருமை. வேளாண் குடும்பத்தில் பிறந்து பெருமைமிகு அரசுப் பள்ளியில் படித்த இவர், இந்தளவுக்கு உயர அவருடைய தன்னம்பிக்கையும், அறிவாற்றலும்தான் காரணம் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக விளங்கிக் கொண்டிருக்கக்கூடிய நிறுவனத்தின் தலைவராக இருக்கின்ற சந்திரசேகரன், இந்திய இளைஞர்களுக்கெல்லாம் முன்மாதிரியாக அவர் விளங்கிக் கொண்டிருக்கிறார். அத்தகைய தலைசிறந்த மனிதருக்கு என்னுடைய அன்பான வணக்கம்.
இந்த நேரத்தில் இன்னொரு விஷயத்தையும் நான் பகிர்ந்துகொள்ள விரும்புறேன். கடந்த 1973ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கலைஞர் இதே ராணிப்பேட்டையில்தான் முதல் சிப்காட்டை தொடங்கினார். ஐம்பது ஆண்டுகள் கடந்து, இங்கே பல்வேறு நிறுவனங்களை பார்ப்பது பெருமையாக இருக்கிறது. தமிழ்நாடுதான் இந்தியாவின் வாகன உற்பத்தி தலைநகரம். அதுமட்டுமல்ல, மின்சார வாகனங்களின் (E-Vehicle) தலைநகரம். ஃபோர்டு, ஹூண்டாய், ரெனோ நிஸான் என்று சர்வதேச வாகன நிறுவனங்களும் இங்கே இருக்கிறது. டாடா மாதிரி சர்வதேச மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகின்ற வாகனங்களை தயாரிக்கின்ற தொழிற்சாலையும் இங்கேதான் இருக்கிறது.
கூடுதல் தகவலாக, இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற மொத்த மின் வாகனங்களில், 40 விழுக்காடு தமிழ்நாட்டில்தான் உற்பத்தி செய்யப்படுகிறது. அதுமட்டுமல்ல, எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியிலும் இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் நம்பர் ஒன். நிதி ஆயோக் கொடுத்த ஏற்றுமதி தயார்நிலை குறியீட்டிலும் தமிழ்நாடுதான் நம்பர் ஒன் என்று குறிப்பிட்டிருக்கிறது. இந்தியாவின் வளர்ச்சியில் தமிழ்நாடு முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதாரமாக தமிழ்நாடு விளங்கிக் கொண்டிருக்கிறது” எனத் தெரிவித்தார். முன்னதாக, கடந்த 1969ஆம் ஆண்டு டாடா நிறுவனர் ஜே.ஆர்.டி. டாடாவுடன், தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுகவின் முன்னாள் தலைவருமான கலைஞர் இருக்கும் புகைப்படத்தை முதல்வர் ஸ்டாலினுக்கு, டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரன் அன்பளிப்பாக வழங்கியது குறிப்பிடத்தக்கது.