டெல்லியில் பிரதமர் மோடியைச் செப்டம்பர் 27ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேச உள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் மோடி 3 நாள் அரசுமுறைப் பயணமாக அமெரிக்காவுக்குச் சென்றுள்ளார். இந்த பயணத்தின் ஒரு பகுதியாகப் பிரதமர் மோடி அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் உள்ள பிலடெல்ஃபியாவுக்கு நேற்று சென்றடைந்தார். அதே சமயம் பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் ஜோ பைடனை சந்தித்துப் பேசியுள்ளார். அதனைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற குவாட் தலைவர்கள் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உடன் இருந்தார். இதனையடுத்து நியூயார்க்கில் ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெறும் உச்சி மாநாட்டில் பிரதமர் பங்கேற்கவுள்ளார்.
இந்நிலையில் அமெரிக்காவில் இருந்து பிரதமர் மோடி நாடு திருப்பியவுடன் அவரைச் சந்திப்பதற்காகத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செப்டம்பர் 26ஆம் தேதி இரவு சென்னையில் இருந்து விமானம் டெல்லி செல்கிறார். அதன்படி செப்டமர் 27ஆம் தேதி பிரதமர் மோடியை முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்தித்துப் பேசுகிறார். அப்போது சென்னை மெட்ரோ ரயிலின் 2ஆம் கட்ட திட்டப் பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தியும், புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் வழங்க வேண்டிய நிதியையும் மத்திய விடுவிக்கக் கோருதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து பிரதமரைச் சந்தித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.