பெரம்பலூர் துறைமங்கலம் பகுதியில் உள்ளது மின்சார வாரிய அலுவலகம். இங்கு உதவி செயற்பொறியாளராக பணிபுரிந்து வந்தவர் மாணிக்கம். கடந்த 2019 டிசம்பர் மாதம் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டார் மாணிக்கம். காரணம் அதே துறைமங்கலம் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவர் அவரது வீட்டு பகுதியில் தாழ்வாக செல்லும் மின்சார லைனை மாற்றி அமைக்குமாறு உதவி செயற்பொறியாளர் மாணிக்கத்திடம் முறைப்படி மனு கொடுத்திருந்தார். அது சம்பந்தமாக மாணிக்கம் சரவணனிடம் பத்தாயிரம் ரூபாய் லஞ்சமாக பணம் கொடுத்தால்தான் மின்சார லைனை மாற்றி அமைக்க முடியும் என்று ரேட் பேசியுள்ளார்.
இதை கண்டு நொந்து போன சரவணன் அரியலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி சந்திரசேகரனிடம் இது குறித்து புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி ஆலோசனையின் படி செயற்பொறியாளர் மாணிக்கத்திடம் சரவணன் லஞ்சப் பணத்தை கொடுக்கும் போது அங்கிருந்த டி.எஸ்.பி சந்திரசேகரன், இன்ஸ்பெக்டர் சுலோச்சனா ஆகியோர் மாணிக்கத்தை லஞ்சப் பணம் வாங்கும்போது கையும் களவுமாக மடக்கிப் பிடித்தனர். இது சம்பந்தமான வழக்கு பெரம்பலூர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் வருமானத்துக்கு அதிகமாகச் மாணிக்கம் சொத்து சேர்த்துள்ளது ஆதாரங்களுடன் நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிமன்றம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் மாணிக்கத்தின் வீடு உட்பட அவர் சம்பந்தப்பட்ட உறவினர் வீடுகளிலும் ரெய்டு நடத்துவதற்கு உத்தரவிட்டது. அதன்படி நேற்று முன்தினம் மாணிக்கத்தின் சொந்த ஊரான வெங்கடேசபுரம் வீடு மற்றும் அவரது தாயார் குடியிருந்து வரும் வெண்பாவூர் வீடு ஆகிய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி சந்திரசேகரன் இன்ஸ்பெக்டர் ரத்தின வளவன் தலைமையிலான போலீசார் நேற்று ரெய்டு நடத்தினார்கள். மதியம் ஒரு மணி முதல் மாலை 6 மணி வரை மாணிக்கத்திற்கு சொந்தமான வீடு அவர் தாயார் வீடு ஆகியவற்றில் ரெய்டு நடத்தி பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ்கார் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது. மின்வாரிய அதிகாரி ஒருவரது வீட்டில் நீதிமன்ற உத்தரவின்படி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ரெய்டு நடத்திய சம்பவம் அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் உள்ள அரசு அதிகாரிகள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.