ஆன்லைனில் பாடம் நடத்திவிட்டு ஆஃப்லைனில் தேர்வு நடத்த எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் மதுரை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் புகழ்பெற்ற அமெரிக்கன் கல்லூரியில் கரோனா பெருந்தொற்று காரணமாக மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்கப்பட்டுவந்துள்ளது. கடந்த சில மாதங்களாக மாணவர்கள் பாடங்களை ஆன்லைனில் படித்தவந்த நிலையில், அவர்களுக்கான செமஸ்டர் தேர்வு கல்லூரியில் நேரடியாக நடத்தப்படும் என்று கல்லூரி நிர்வாகம் மிக சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
இதனால் அதிர்ச்சியான மாணவர்கள் ஆன்லைனில் பாடம் நடத்திவிட்டு ஆஃப்லைனில் தேர்வு நடத்துவது எந்தவிதத்தில் நியாயம் என்று கேள்வி எழுப்பிய நிலையில், மதுரை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஒரே நேரத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்ததால் ஆட்சியர் அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது. பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. முதற்கட்டமாக தேர்வுகள் இரண்டு வாரத்துக்கு ஒத்திவைக்கப்படுவதாக கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.