Skip to main content

முதல்வர் பிறந்தநாள் விழா; சீறிப்பாய்ந்த குதிரைகள்

Published on 06/03/2023 | Edited on 06/03/2023

 

cm mk stalin birthday celebration in karur 

 

திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்த தினத்தை முன்னிட்டு கரூரில் மாவட்ட திமுக சார்பில் குதிரை வண்டி எல்கை பந்தயம் சனிக்கிழமை மாலை நடைபெற்றது. சிறிய குதிரை, புதிய குதிரை, பெரிய குதிரை என மூன்று பிரிவுகளில் நடைபெற்ற இந்த குதிரை வண்டி பந்தயத்தில் திருச்சி, கரூர், புதுக்கோட்டை, ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட குதிரை வண்டிகள் பங்கேற்றன. பந்தயத்தில் கலந்துகொண்ட குதிரைகள் சீறிப்பாய்ந்து சென்று இலக்கை அடைந்தன.

 

போட்டியின் இலக்காக கரூர் அரசு காலனி முதல் வாங்கல் வரை 5 கி.மீ. என தூரம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. போட்டியில் பெரிய குதிரை வண்டி பிரிவில் கரூர் பாரத் பஸ் கம்பெனியின் வைரவேல் குதிரை வண்டி முதலிடம் பிடித்து பரிசுத் தொகையாக 30000 ரூபாய் மற்றும் கோப்பையை தட்டிச் சென்றது. இரண்டாம் இடத்தை பிடித்த சேலம் சந்திரன் குதிரை வண்டிக்கு இரண்டாம் பரிசாக 25000 ரூபாய் மற்றும் கோப்பையும், மூன்றாம் இடம் பிடித்த கரூர் நவலடியான் குதிரை வண்டிக்கு பரிசாக 20000 ரூபாய் மற்றும் கோப்பையும் வழங்கப்பட்டன.

 

இதேபோல் சிறிய குதிரை பிரிவில் முதலிடம் பிடித்த கரூர் கேஎம்ஆர் வினோத் குதிரைக்கு முதல் பரிசாக 25000 ரூபாய் மற்றும் கோப்பையும், இரண்டாம் இடம் பிடித்த திருச்சி மீண்டும் தேவர் வம்சம் குதிரை வண்டிக்கு பரிசாக 20000 ரூபாய் மற்றும் கோப்பையும், மூன்றாம் இடம் பிடித்த கோவை மகா கணபதி குதிரை வண்டிக்கு பரிசாக 15000 ரூபாய் மற்றும் கோப்பையும் வழங்கப்பட்டது. இதேபோல புதிய குதிரை பிரிவில் கோவை அசோக் குதிரை வண்டி முதலிடம் பிடித்து முதல் பரிசான 20000 ரூபாய் மற்றும் கோப்பையை தட்டிச் சென்றது. இரண்டாம் இடம் பிடித்த கரூர் அலிம்கேர் குதிரை வண்டிக்கு பரிசாக 15000 ரூபாய் மற்றும் கோப்பை, மூன்றாம் இடம் பிடித்த ஈரோடு பவானியை சேர்ந்த கேஆர்பி குதிரை வண்டிக்கு மூன்றாம் பரிசாக 10000 ரூபாய் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது.

 

பரிசு மற்றும் கோப்பையை திமுக மாவட்ட துணைச் செயலாளர் எம்.எஸ்.கே.கருணாநிதி வழங்கினார். சுமார் 50க்கும் மேற்பட்ட குதிரை வண்டி உரிமையாளர்கள் கலந்து கொண்டு பரிசுகளை தட்டிச் சென்றனர். நிகழ்ச்சியில் திமுகவினர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் உற்சாகத்துடன் குதிரை பந்தயத்தை பார்வையிட்டு சென்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்