Skip to main content

“140 மீனவர்கள் இலங்கை அரசின் வசம் உள்ளனர்” - முதல்வர் மு.க. ஸ்டாலின் வேதனை!

Published on 28/10/2024 | Edited on 28/10/2024
CM MK Stalin agony for 140 fishermen are in the possession of the Sri Lankan govt

நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் நேற்று முன்தினம் (26.10.2024) கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றிருந்தனர். அப்போது, இலங்கைக் கடற்படையினரால் 12 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், கைது செய்யப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திடவும், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு நேற்று (27.10.2024) கடிதம் எழுதியிருந்தார்.

அக்கடிதத்தில், “இந்திய மீனவர்கள் இலங்கை அதிகாரிகளால் தொடர்ந்து இதுபோன்று கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ந்து வருகிறது. இத்தகைய கைது நடவடிக்கைகள், இந்தியா - இலங்கை இடையிலேயான ஆக்கப்பூர்வமான தூதரக முயற்சிகளுக்கு அழைப்பு விடுக்கும் ஒரு முக்கியப் பிரச்சினையாக மாறியுள்ளது. மீனவர்கள் இதுபோன்று கைது செய்யப்படுவது, இந்தியாவில், குறிப்பாகத் தமிழ்நாட்டில் உள்ள மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் வாழ்வாதாரம் மற்றும் பாதுகாப்பிற்குக் கடுமையான அச்சுறுத்தலைத் தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது.

CM MK Stalin agony for 140 fishermen are in the possession of the Sri Lankan govt

அந்த வகையில் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள் நேற்று முன்தினம் (26-10-2024) ஐ.என்.டி. - டி.என் -06 - எம்.எம். - 5102 (IND-TN-06-MM-5102) என்ற பதிவெண் கொண்ட படகில் மீன்பிடிக்கச் சென்றிருந்தனர். அந்நிலையில், இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இந்த (2024) ஆண்டில் மட்டும் இதுபோன்று 30 சம்பவங்கள் நடந்துள்ளன. நேற்றைய (27.10.2024) நிலவரப்படி 140 மீனவர்கள் மற்றும் 200 மீன்பிடிப் படகுகள் இலங்கை அரசின் வசம் உள்ளனர். எனவே, இந்தப் பிரச்சினையை முன்னுரிமை அடிப்படையில் எடுத்துச் சென்று, இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என முதல்வர் மு.க. ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்