இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் கட்டப்பட்டுள்ள வீடுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
திமுகவின் முப்பெரும் விழா இன்று (செப்டம்பர் 17) வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பள்ளிகொண்டா அடுத்த கந்தநேரி பைபாஸ் சாலை அருகில் நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் கலந்து கொள்ள வேலூர் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேலூர் மாவட்டம் மேல்மொணவூர், இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் நடைபெற்ற விழாவில் பொது மற்றும் மறுவாழ்வுத்துறை சார்பில் 13 மாவட்டங்களில் உள்ள 19 முகாம்களில் 79.70 கோடி ரூபாய் செலவில் கட்டிமுடிக்கப்பட்டுள்ள 1,591 வீடுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வேலூர் மாவட்டத்தில் நேரடியாக திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து இதர 12 மாவட்டங்களில் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
மேலும், மேல்மொணவூர், இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வு முகாம் இல்ல வாசிகளுக்கு புதிய குடியிருப்புகளை வழங்கிடும் அடையாளமாக 5 குடும்பத்தினருக்கு குடியிருப்புக்கான சாவிகளையும், 8 வகையான வீட்டு உபயோக பொருட்களையும், மரக்கன்றுகளையும், மாணவர்களுக்கு தேவையான கல்வி உபகரணங்களையும் வழங்கினார். வீடுகளை நன்றாக பராமரித்திட வேண்டும் என்றும், சுற்றுப்புறங்களை சுகாதாரமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார். முன்னதாக 13 மாவட்டங்களில் 193 இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாம்களில் கட்டப்பட்ட புதிய குடியிருப்புகளின் புகைப்படத் தொகுப்பினை பார்வையிட்டார்.
இவ்விழாவில் அமைச்சர்கள் துரைமுருகன், ஐ.பெரியசாமி, கே.ஆர். பெரியகருப்பன், ஆர்.காந்தி, செஞ்சி கே.எஸ்.மஸ்தான், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் எஸ்.ஜெகத்ரட்சகன், கதிர் ஆனந்த், கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள், ஏ.பி.நந்தகுமார், பா.கார்த்திகேயன், அமலு விஜயன், ஆ. தமிழரசி, வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார், துணை மேயர் சுனில்குமார், வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன் மற்றும் அரசு அலுவலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.