Skip to main content

பெங்களூரு கட்டட விபத்து; உயிரிழந்த தமிழர்களின் குடும்பத்துக்கு முதல்வர் நிதியுதவி! 

Published on 24/10/2024 | Edited on 24/10/2024
CM financial assistance to 2 Tamil families for bengaluru building incident 

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த சில தினங்களாகக் கனமழை பெய்து வருகிறது. இதற்கிடையே பெங்களூரு அருகே உள்ள ஹென்னூரில் 6 அடுக்குகள் கொண்ட புதிய கட்டடம் ஒன்று கட்டப்பட்டு வந்தது. இதில் பல்வேறு தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். இத்தகைய சூழலில் தான் கனமழை காரணமாக நேற்று முன்தினம் (22.10.2024) திடீரென இந்த கட்டடம் இடிந்து விழுந்தது. இந்த கட்டட விபத்தில் சிக்கியவர்களில் பலர் 21 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில் 8 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும்,  சோகத்தையும் ஏற்படுத்தியிருந்தது.

அதே சமயம் உயிரிழந்த 8 பேரில் 2 பேர் தமிழகத்தைச் சேர்ந்த மணிகண்டன், சத்யராஜ் எனத் தெரியவந்தது. இந்நிலையில் கனமழை காரணமாகக் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த தமிழர்கள் இருவரின் குடும்பத்தினருக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்து நிதியுதவி அறிவித்துள்ளார்.  இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “கர்நாடக மாநிலம், பெங்களூரு, ஹென்னூரில் நேற்று முன்தினம் (22.10.2024) பிற்பகலில் பெய்த கனமழையின் காரணமாக கட்டுமானப்பணி நடந்துகொண்டிருந்த கட்டடம் எதிர்பாராதவிதமாக இடிந்து விழுந்த விபத்து ஏற்பட்டது.  இதில் 8 நபர்கள் உயிரிழந்தனர்.

CM financial assistance to 2 Tamil families for bengaluru building incident 

மேலும், இவ்விபத்தில் தமிழ்நாட்டிலிருந்து கட்டுமானப் பணிக்காகச் சென்றிருந்த கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் மற்றும் சத்தியராஜ் ஆகிய இருவரும் உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக்கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், மனவேதனையும் அடைந்தேன். இந்த விபத்தில் உயிரிழந்த மணிகண்டன் மற்றும் சத்தியராஜ் ஆகியோரின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன். அதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்