கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கருணாபுரம் பகுதியில் நேற்று (19-06-24) கள்ளச்சாராயம் விற்கப்பட்டதாகவும், இதனைப் பலர் வாங்கி குடித்து பலியானோரின் எண்ணிக்கை தற்போது 37 ஆக உயர்ந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்டோர் ஜிப்மர் மருத்துவமனை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் எனப் பல்வேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். கள்ளச்சாராயம் குடித்து 30க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது வேதனையைத் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “என்னை மிகவும் வேதனைக்குள்ளாக்கியுள்ள கள்ளக்குறிச்சி நிகழ்வு நிகழ்ந்திருக்கக் கூடாத ஒன்று. எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் அத்தனையையும் கண்காணித்து வருகிறேன்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவியும் அறிவித்துள்ளேன். அமைச்சர்கள், உள்துறைச் செயலாளர், காவல்துறை இயக்குநர் உள்ளிட்டோர் நேரில் சென்று நடவடிக்கைகளைக் கண்காணிக்கின்றனர்.
இனி இதுபோன்ற சம்பவங்கள் தமிழ்நாட்டில் மீண்டும் நடைபெறாமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு ஆலோசனைகளை வழங்கிட, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் பி.கோகுல்தாஸ் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைத்திட உத்தரவிட்டுள்ளேன். இந்த ஆணையம், சம்பவம் குறித்து முழுமையாக விசாரித்து தனது பரிந்துரைகளை மூன்று மாதங்களுக்குள் வழங்கும்” எனப் பதிவிட்டுள்ளார்.