Skip to main content

 முக்குலத்துப்புலிகள் ஆர்ப்பாட்டம் - தர்மேந்திரப்பிரத்தான் உருவபொம்பை எரிப்பு

Published on 01/10/2018 | Edited on 01/10/2018
nagai

 

 காவிரி டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் திட்டம் நிறைவேற்றுவதற்கு இன்று ஒப்பந்தம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வேளாங்கண்ணி  காமேஸ்வரம்  தபால் நிலையம் முன்பு முக்குலத்து புலிகள் அமைப்பினர் மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திரபிரதான் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

 

போராட்டத்தை நடத்திய முக்குலத்துப்புலிகள் அமைப்பின் தலைவர் ஆறுசரவணன் கூறுகையில், " ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்தை இந்தியா முழுவதும்  55 மண்டலங்களில்  செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதில் 3 மண்டலங்கள் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட உள்ளது.  விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் முதல் கடலூர் வரை முதல் மண்டலமாகவும், பரங்கிப்பேட்டை முதல் வேளாங்கண்ணி வரை இரண்டாவது மண்டலமாகவும், கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி முதல் நாகை மாவட்டம் தரங்கம்பாடி வரை மூன்றாவது மண்டலமும் அமைக்கப்படவுள்ளன.

 

இந்த மூன்று மண்டலங்களில் இரண்டு மண்டலங்கள்  ஸ்டெர்லைட் நிறுவனமான வேதாந்தா நிறுவனத்திற்கும், ஒரு மண்டலம் ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கும் ஒதுக்கப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள செய்திகள் டெல்டா பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே, புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு, மக்கள் ஏகோபித்த எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், “தமிழக அரசின் அனுமதியின்றி ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது” கூறிய மத்திய அரசு தற்போது திடீரென்று மூன்று இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி வழங்கியிருப்பது தமிழக மக்களை ஏமாற்றும் வேலையாகும்.

 

தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலை நடத்தி பல பேருக்குப் புற்றுநோயை கொடுத்து, பல பேரை துப்பாக்கி சூட்டிற்கு இரையாக்கிய வேதாந்தா நிறுவனத்திற்கு ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி அளித்திருப்பது என்பது மத்திய  அரசிற்குத் தமிழகத்தின் மீதும், தமிழக மக்கள் மீதும் சிறுதுளி அளவும் அக்கறை இல்லை என்பதை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது.
இத் திட்டத்திற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகியுள்ள உள்ள நிலையில் விவசாயத்தையும், சுற்றுச்சூழலை பாதித்து டெல்டா பகுதியை பாலைவனவாக்கும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும் " என்றார்.

 

இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் நாகை மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்துள்ள காமேஸ்வரம்  தபால் நிலையம் முன்பு மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திரபிரதான் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும்   மக்களை ஒன்றுதிரட்டி மிகப்பெரிய அளவில் மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்றும் முக்குலத்து புலிகள் அமைப்பினர் மத்திய அரசுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 

சார்ந்த செய்திகள்