கொத்தமங்கலத்தில் குடிதண்ணீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர். மெய்யநாதன் எம்.எல்.ஏ சமாதனம் செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் மாவட்டத்தில் பெரிய ஊராட்சி. இந்த கிராமத்தில் ஒவ்வொரு பகுதியிலும் நீர் தேக்க தொட்டிகள் அமைத்து குடிதண்ணீர் வழங்கப்படுகிறது. ஆனால் கடந்த பல மாதங்களாக ஒவ்வொரு பகுதியிலும் குடிதண்ணீர் பிரச்சணை ஏற்பட்டடுள்ளது. அதாவது பல ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 350 அடி ஆழம் வரை அமைக்கப்பட்டிருந்த ஆழ்குழாய் கிணறுகளில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டதால் குடிதண்ணீர் கொடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதனால் ஒவ்வொரு பகுதி மக்களும் அடிக்கடி குடிதண்ணீர் கேட்டு ஊராட்சி அலுவலகம் முற்றுகை போராட்டம் நடத்தினார்கள். அதன் பிறகு அந்த பகுதிக்கு புதிய ஆழ்குழாய் கிணறுகள் அமைக்க உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு புதிய ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளது.
அதே போல கொத்தமங்கலம் மேற்கு சிதம்பரவிடுதி பகுதி பொதுமக்களுக்கு குடிதண்ணீர் கொடுத்து வந்த ஆழ்குழாய் கிணறு பழுது ஏற்பட்டதால் கடந்த சில மாதங்களாக குடிதண்ணீர் பிரச்சணை ஏற்பட்டுள்ளது. அதனால் அருகில் உள்ள விவசாய ஆழ்குழாய் கிணறுகளில் குடிதண்ணீர் பிடித்துள்ளனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மின்சாரம் பற்றாக்குறையாக வருவதால் விவசாய ஆழ்குழாய் கிணறுகளும் இயங்குவதில்லை. அதனால் குடிதண்ணீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தனர். அதனால் குடிதண்ணீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட, ஒன்றிய அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் பலனில்லை என்பதால் நேற்று திடீரென பெண்கள், பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சாலை மறியல் நடப்பதை அறிந்து அங்கு சென்ற கீரமங்கலம் போலிசார் மற்றும் வருவாய் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் வர வேண்டும் என்று போராட்டத்தில் இருந்த பெண்கள் கூறிவிட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த ஆலங்குடி தொகுதி எம்.எல்.ஏ மெய்யநாதன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களிடம் சமாதானம் பேசினார். தொடர்ந்து ஒன்றிய அதிகாரிகள் வரும் வரை காத்திருப்போம். ஆனால் பஸ்கள் செல்ல அனுமதிக்கலாம் என்று கூறியதால் பஸ்கள் சென்றது. தொடர்ந்து ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் வந்து விரைவில் குடிதண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவாதம் கொடுத்த பிறகு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.