தமிழ்நாட்டிலும் வடமாநிலங்களைப் போல விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சிகள் விநாயகர் சிலை ஊர்வலங்கள் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஊர்வலமாகக் கொண்டு செல்லும் விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கும் போது கரையும் தன்மையிலும் சுற்றுச்சூழலை, நீர்நிலைகளைப் பாதிக்காத வகையில் வண்ணங்கள் தீட்ட வேண்டும் என்று பல விதிமுறைகளும் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் களிமண் விநாயகர் சிலைகள் செய்யப்படுவதால் வாழ்வாதாரம் இழந்திருந்த மண்பாண்ட கலைஞர்கள், தொழிலாளர்களுக்கு சில மாதங்கள் வேலைவாய்ப்புகளும் கிடைத்து வருகிறது.
ஆனால் கடந்த சில ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருந்ததால் விநாயகர் ஊர்வலங்கள் ரத்து செய்யப்பட்டது. அதனால் அப்போது செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் அப்படியே தேங்க, மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டது. ஆனால் கடந்த ஆண்டு முதல் மீண்டும் விநாயகர் சிலை ஊர்வலங்கள் நடத்த அனுமதி கிடைத்துள்ளது. இந்த வருடமும் மண்பாண்ட கலைஞர்கள் பல ஆயிரக்கணக்கான களிமண் விநாயகர் சிலைகளை செய்து வைத்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் மழையூர், துவரடிமனை, வாராப்பூர், அறந்தாங்கி, ஆவுடையார்கோயில், செரியலூர் எனப் பல இடங்களிலும் களிமண் விநாயகர் சிலைகள் செய்யப்பட்டு வரும் நிலையில், துவரடிமனை கிராமத்தில் அரை அடி முதல் 10 அடி உயரம் வரை 500க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் செய்து வண்ணம் தீட்டப்பட்டு வருகிறது. குடும்பம் குடும்பமாகவும் சம்பள ஆட்கள் மூலமாகவும் சிலைகள் செய்யப்படுகிறது. ஜல்லிக்கட்டு காளைகளை அடக்கும் பிள்ளையார், யானை, குதிரை மீது ஏறி சவாரி செய்யும் பிள்ளையார், புல்லாங்குழல் வாசிக்கும் பிள்ளையார், ஆயுதங்களுடன் பிள்ளையார், லிங்கம் தூக்கும் பிள்ளையார், விநாயகர் மடியில் அவரது தம்பி முருகன் அமர்ந்திருக்கும் பிள்ளையார்கள் என ஏராளமான வகையில் அரை அடி முதல் 10 அடி உயரம் வரை பிள்ளையார் சிலைகள் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிள்ளையார் சிலைகள் செய்து வரும் துவரடிமனை சங்கர் கூறும்போது, “கடந்த பல வருடங்களாக மண்பாண்டங்களை மக்கள் வாங்குவது குறைந்து வருவதால் இளைய தலைமுறை இந்த வேலை செய்ய முன்வரவில்லை. சம்பளத்திற்கு ஆள் கூட்டி வந்து சிலைகள் செய்கிறோம். ஆனால் கரோனாவால் கடந்த சில வருடங்கள் செய்த பிள்ளையார் சிலைகள் தேங்கிவிட்டது. இதனால் சம்பளம் கொடுக்க முடியவில்லை. குடும்பமே நடத்த சிரமப்பட்டோம். கடந்த ஆண்டு முதல் விநாயகர் ஊர்வலம் நடந்ததால் நம்பிக்கையோடு சிலைகள் செய்து வருகிறோம். நிறைய பேர் வந்து பார்க்கிறார்கள். இந்த ஆண்டு விநாயகர் மடியில் முருகன் அமர்ந்திருக்கும் பிள்ளையார் சிலைகளை அதிகம் பேர் கேட்கிறார்கள். இதே போல ஒவ்வொரு வருடமும் புதுப்புது வடிவங்களில் பிள்ளையார்கள் செய்கிறோம். இந்த வருடம் சந்திரயான் 3 பிள்ளையார் செய்ய இருக்கிறோம். நாங்கள் சுற்றுச்சூழலை, தண்ணீரை மாசுபடுத்தாத வகையில் களிமண்ணில் விநாயகர் சிலைகள் செய்து தண்ணீர் வண்ணங்களையே பூசிக் கொடுக்கிறோம். மேலும் மண்ணோடு மர விதைகளையும் கலந்து செய்து வைத்துள்ளோம்” என்றார்.