Skip to main content

பாரம்பரிய இசைக் கலைஞர்களுக்கு நிவாரண உதவி கோரி வழக்கு! - உயர்நீதிமன்றம் உத்தரவு!

Published on 29/06/2020 | Edited on 29/06/2020
chennai high court

 

கரோனா ஊரடங்கால் வருவாய் இன்றி பாதிக்கப்பட்டுள்ள நாதஸ்வரம், தவில் உள்ளிட்ட பாரம்பரிய இசைக் கலைஞர்களுக்கு தனி நல வாரியம் துவங்கி, நிவாரண உதவி வழங்கக்கோரிய வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம் ஜூலை 1-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.

கரனோ பரவலை தடுக்க அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக கோவில்கள் திறக்கவும், திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் நடத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற நிகழ்ச்சிகளில் மங்கல இசைக் கருவிகளை வாசிக்கும் நாதஸ்வரம், தவில் உள்ளிட்ட இசைக் கலைஞர்கள், கரோனா ஊரடங்கு காரணமாக வருமானம் இன்றி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதால், அவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி, தமிழ்நாடு இசை வேளாளர் இளைஞர் பேரவை கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர்  குகேஷ்,  சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்கள் அமைக்கப்பட்டுள்ளது போல, நாதஸ்வரம், தவில், மிருதங்கம், வயலின், வீணை போன்ற வாத்திய இசைக் கலைஞர்களுக்கும், பரதநாட்டிய கலைஞர்களுக்கும், தனியாக நலவாரியம் அமைக்க அரசுக்கு உத்தரவிட வேண்டுமென, கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது,  தமிழ் நாட்டுப்புற இசைக்கலைஞர்களுக்கு என தனி நல வாரியம் ஏற்கனவே உள்ளது எனவும், பாரம்பரிய இசைக் கலைஞர்களுக்கு நிவாரண உதவி கோரி, ஏற்கனவே ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது.  அந்த வழக்கு ஜூலை 1-ம் தேதி விசாரணைக்கு வர உள்ளதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த வழக்குடன் சேர்த்து இந்த வழக்கையும் ஜூலை 1-ம் தேதி விசாரணைக்கு பட்டியலிட நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 

சார்ந்த செய்திகள்