கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர் ஆகிய இரண்டு மாவட்டங்களில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆய்வு செய்தார்.
ஆய்வுக் பின்னர் வேதாரண்யத்தின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
கஜா புயலால் தமிழக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் மத்திய அரசு, மாநில அரசு என இரண்டுக்கும் பொறுப்பு இருக்கிறது. சேதம் அடைந்த விவரங்களை மத்திய அரசுக்கு தெரிவித்திருக்கிறோம். இவ்வளவு நிதி தேவை என்று கோரியிருக்கின்றோம். முதல் கட்டமாக இவ்வளவு நிதி தேவை என்றும் கேட்டிருக்கின்றோம். அவர்கள் மனசாட்சிப்படி, மனிதநேயப்படி வழங்குவார்கள் என்று நம்பியிருக்கின்றோம்.
நீங்கள் வருவதற்கு எதிர்ப்பு இருந்ததாக கூறப்பட்டது. மக்களை நேரில் சந்தித்திருக்கிறீர்கள். மக்கள் என்ன சொல்கிறார்கள்?
நீங்கள் எந்த அடிப்படையில் கேள்வி கேட்கிறீர்கள் என்று தெரியவில்லை. புயல் வருதற்கு முன்பே போர்க்கால அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுத்தது. ஊடகத்தின் வாயிலாக, பத்திரிகை வாயிலாக தெளிவுப்படுத்தப்பட்டது. கஜா புயல் வருவதற்கு முன்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ன எடுக்க வேண்டும் என்று தலைமைச் செயலகத்தில் என் தலைமையில் இரண்டு முறை ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
அதில் துணை முதல் அமைச்சர் மற்றும் மூத்த அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். அதில் எடுக்கப்பட்ட முடிவுகளை மாவட்ட ஆட்சியர்களிடம் தெரிவித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது. மூத்த இந்திய ஆட்சிப் பணியாளர்களை புயல் வரும் என தெரிவிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள்.
புயல் வந்தால் கடுமையான சேதம் ஏற்படும் என்று இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்தன் அடிப்படையில் தாழ்வான பகுதிகளில், கடலோரங்களில் உள்ள மக்கள், குடிசைகளில் உள்ள மக்களை அரசு அமைத்த முகாம்களில் தங்க வைத்தோம். இதன் காரணமாக 82 ஆயிரம் பேர் பாதுகாக்கப்பட்டுள்ளனர்.
அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தையும் எடுத்திருக்கிறது. இது எதிர்பாராத ஒரு சேதம். இயற்கை பேரிடர். யாரும் எதிர்பார்க்கவில்லை இவ்வளவு சேதம் ஏற்படும் என்று. இருந்தாலும் அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் இங்கேயே தங்கி புயல் வருவதற்கு முன்பாகவே பணிகளை ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களுக்கு உதவியாக மற்ற அமைச்சர்களை புயல் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்து இரவு பகல் பாராமல் புயல் அடித்த அடுத்த நாளிலில் இருந்து இங்கேயே தங்கி பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இது அனைவருக்கும் தெரியும்.
அரசை பொறுத்தவரைக்கும் எந்தவித தொய்வும் இல்லாமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரணங்களை அளிப்பதற்கு நடவடிக்கையை எடுத்து வருகிறது.
நாகை, திருவாரூர் மாவட்டங்களில் உள்ள முகாம்களில் மக்கள் இன்னும் தங்கியுள்ளனர். அவர்கள் மீண்டும் குடியிருப்புகளுக்கு செல்வதற்கான வாய்ப்பு எப்போது?
அவர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள இந்த சூழ்நிலையில் குடிநீர் வசதி, மின்சார வசதி தேவை என்று கோரிக்கை வைத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த மாவட்டத்தைப் பொறுத்தவரையில் 3 ஆயிரம் ஆழ்துளை கிணறுகள் போடப்படுகிறது. ஒரு லட்சத்திற்கும் மேலான மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. அவைகளை சரிசெய்யும் பணிகள் படிப்படியாக நடைபெறுகிறது. இன்னும் 4 அல்லது 5 நாட்களில் மின்சாரம் கிடைத்துவிடும். கூரைவீடுகளக்கு தார் பாய் வேண்டும் என்று கேட்டார்கள். அதையும் அரசு கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. முகாம்களில் உள்ள மக்களுக்கு 27 பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.