வரும் கல்வி ஆண்டு முதல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கும் விடைத்தாள் மறுமதிப்பீடு மற்றும் விடைத்தாள் நகலை விண்ணப்பித்து பெற்றுக்கொள்ள பள்ளி கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளது.
கடந்த ஆண்டுகளில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் மறு கூட்டலுக்கு மட்டுமே விண்ணப்பிக்கும் நிலை இருந்தது. இந்தநிலையில் பள்ளிக் கல்வித்துறையின் முதன்மை செயலாளர் குமரகுருபரன் வெளியிட்டுள்ள அரசாணையில், 'மேல்நிலை வகுப்புகளில் விடைத்தாள்கள் நகல்களை வழங்குவது போன்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களும், துணைத் தேர்வு, தனித்தேர்வு எழுதும் மாணவர்களும் தங்களுடைய விடைத்தாள் நகல்களை விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு விடைத்தாள் நகலை பெறுவதற்கு 275 ரூபாயும், ஒரு விடைத்தாள் மறுமதிப்பீடு செய்வதற்கு 505 ரூபாயும், ஒரு விடைத்தாள் மறு கூட்டல் செய்ய 205 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.