பழவேற்காட்டில் மீனவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் வீடுகள் தாக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு ஆண்டிகுப்பம் பகுதியில் ஏரியில் மீன் பிடிப்பது தொடர்பாக இருதரப்பு மீனவர்களிடையே ஏற்பட்ட பிரச்சனை மோதலாக உருவெடுத்த நிலையில், அங்கு ஒவ்வொரு தரப்பினரும் மாற்றுத் தரப்பினரின் வீடுகளை தாக்கியதால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் அதிகப்படியான போலீசார் அங்கு பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
ஆண்டிகுப்பம் மீனவ கிராமத்தில் பழவேற்காடு ஏரியில் மீன் பிடிப்பதில் நீண்ட காலமாக 5 தரப்பு மீனவர்களுக்கு இடையே பிரச்சனை இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் 5 தரப்பு மீனவர்களும் அதிகாரிகள் முன்னிலையில் பல்வேறுகட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தினர். ஆனால் பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்படாத நிலையே இருந்தது. இந்நிலையில் நீதிமன்றத்தை ஒரு தரப்பினர் அணுகிய நிலையில், அவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனை எதிர்த்து அங்கு நேற்று முன்தினம் மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் இன்று செல்வம் தரப்பு மீனவர்களும், ராஜா தரப்பு மீனவர்களும் மோதிக் கொண்டதால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இதனால் அங்கு அதிகப்படியான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.