இன்று அக்.2 ஆம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழக அரசு கிராம சபை கூட்டம் நடத்த அனுமதி வழங்கி இருந்தது. இந்நிலையில் கடலூரில் கோட்டலாம்பாக்கத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் அடிதடி மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ளது கோட்டலாம்பாக்கம் என்ற கிராமம். இன்று பஞ்சாயத்து தலைவர், துணைத் தலைவர் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கிராம மக்களும் பங்கேற்றிருந்தனர். அப்பொழுது பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் ஜெய்சங்கர் என்பவர் கிராமத்தின் கணக்கு வழக்குகள் குறித்து கேட்டுக் கொண்டிருந்தார். அப்பொழுது பஞ்சாயத்துத் துணை தலைவர் வசந்தியின் கணவர் வீரமணிக்கும் ஜெயச்சந்திரனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் வாக்குவாதமானது மோதலில் முடிந்தது. இதனால் இரு தரப்பும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இந்த மோதலில் பஞ்சாயத்து துணைத்தலைவரின் கணவர் வீரமணி தாக்கப்பட்டார். இதனால் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த மக்கள், பெண்கள் சிதறி ஓடினர். இதனால் கூட்டமானது பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது. காவல்துறையினர் மோதல் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.