உலகப் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றாக விளங்கக்கூடியது காஞ்சிபுரம் அத்தி வரதர் வரதராஜப் பெருமாள் கோவில். இந்த பிரமாண்ட கோவிலுக்கு, வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். மேலும், இங்கு காலை, மாலை என இரு நேரங்களிலும் பிரபந்தங்கள் பாடி சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். ஆனால், யார் பிரபந்தங்கள் பாடுவது என்பதில் அந்தக் கோவிலோடு தொடர்புடைய வடகலை பிரிவினருக்கும் தென்கலை பிரிவினர்களுக்கும் பல ஆண்டுகளாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. அவ்வப்போது இது பற்றிய புகார்களும் மக்கள் மத்தியில் பரவி வரும்.
இந்நிலையில், இந்த ஆண்டின் வைகாசி பிரம்மோற்சவ விழா கடந்த மே மாதம் 31 ஆம் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து, மூன்றாம் நாளான ஜூன் 2 ஆம் தேதியன்று கருடசேவை உற்சவங்கள் நடைபெற்று வந்த நிலையில், இரவு ஹனுமந்த வாகன உற்சவமும் நடைபெற்றுள்ளது. அப்போது வடகலை மற்றும் தென்கலை பிரிவினருக்கிடையே வேத பாராயணம் பாடியபோது சிறு சிறு உரசல்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் வேத பாடல்கள் ஒலிக்க வேண்டிய நேரத்தில், வாக்குவாதம் நடந்ததால் கோவிலுக்குள் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, சாமிக்கு பூஜை செய்த பிரசாதம் வழங்கும்போது, வடகலை பிரிவினரே வேத பாராயணம் பாடிய நிலையில், எதற்காக தென்கலை பிரிவினருக்கு வழங்கப்படுகிறது என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஒருகட்டத்தில் இருதரப்பினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் அந்த பிரசாதமும் கீழே விழுந்துள்ளது. இதையடுத்து, இந்த கூச்சல் குழப்பத்தில் பெருமாளின் சடாரியை வடகலை பிரிவினர், கீழே தள்ளிவிட்டதாகக் கூறி தென்கலை பிரிவினர் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட முயன்றனர். இதனிடையே, இவர்கள் சண்டை போட்டுக் கொள்வதைப் பார்த்த பக்தர்கள் அதிர்ச்சியடைந்து முகச்சுளிப்புடன் வெளியே செல்லத் தொடங்கினர். தற்போது, இது தொடர்பான வீடியோ காட்சிகள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.