திருச்சி மாவட்டத்தில் அமைச்சர்கள் ஒவ்வொருவரின் ஆதரவாளர்கள் தனித்தனியாக பிரிந்து கிடப்பது ஒருபக்கம் இருந்தாலும் எம்.பி. திருச்சி சிவாவுக்கு குறிப்பிட்ட அளவில் ஆதரவாளர்கள் உள்ளனர். அதேபோல் இங்கு கட்சியில் பொறுப்பில் இருப்பவர்கள் ஒவ்வொருவருக்கும் ஆதரவாளர்கள் இருந்தாலும் பிரதானமாக இருப்பது அமைச்சர்களுக்கு தான். இன்று காலை திருச்சி எஸ்பிஐ காலனியில் இறகு பந்து மைதானத்தை திறந்து வைப்பதற்காக வந்த அமைச்சர் கே.என்.நேருவிற்கு திமுகவினரில் சிலர் கருப்பு கொடி காண்பித்துள்ளனர்.
இதற்கான காரணம் குறித்து நாம் விசாரித்ததில், திமுகவின் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் அந்தந்த குடியிருப்பு பகுதிகளில் மக்களின் மேம்பாட்டிற்காகவும், பொழுதுபோக்குகளுக்காகவும், பாதுகாப்பிற்காகவும் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு மாநகராட்சி சார்பில் ஒரு பங்கு நிதி வழங்கப்பட்டு, பொதுமக்களுக்கான விளையாட்டு மைதானம், பூங்கா, கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்டவற்றை அமைக்கும் வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாகத்தான் இன்று அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இறகு பந்து உள்விளையாட்டு அரங்கை அமைச்சர் திறந்து வைக்க வந்துள்ளார்.
அந்த விளையாட்டு மைதானம் எம்.பி. சிவா வீட்டிற்கு அருகில் அமைந்துள்ளது. அதன் திறப்பு விழாவிற்கு என்று அச்சடிக்கப்பட்ட அழைப்பிதழிலும், விளையாட்டு மைதானத்தில் வைக்கப்படும் கல்வெட்டிலும் எம்.பி. சிவாவின் பெயர் அச்சிடப்படவில்லை. இதனை அறிந்த எம்.பி.யின் ஆதரவாளர்கள் கொதித்து எழுந்து அமைச்சரின் காருக்கு முன்பாக நின்று கருப்பு கொடி காட்டியுள்ளனர். இதனால் சூடான அமைச்சர் விறுவிறுவென்று விளையாட்டு மைதானத்தை திறந்து வைத்துவிட்டு புறப்பட்டு சென்றுள்ளார்.
ஆனால், அவருடைய ஆதரவாளர்கள் எம்.பி. சிவாவின் வீட்டிற்குள் ஏறிக் குதித்து அங்கு நிறுத்தப்பட்டிருந்த காரின் கண்ணாடிகளையும், வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளையும் அடித்து நொறுக்கியுள்ளனர். தற்போது எம்.பி. திருச்சி சிவா டெல்லியில் இருப்பதால் இந்த சம்பவம் குறித்து அறிந்த அவருடைய மகன் சூர்யா சிவா தன்னுடைய ஆதரவாளர்களைத் திரட்டிக்கொண்டு செசன்ஸ் நீதிமன்ற காவல்நிலையத்தை முற்றுகையிட்டு இந்த தாக்குதலை செய்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து கண்டன கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் போலீசும் எம்.பி. சிவாவின் வீட்டிற்கு சென்று அங்குள்ள சிசிடிவி பதிவுகளை சேகரித்து வைத்துள்ளது. மேலும் அதில் பதிவான முகங்களை தேடும் பணியில் ஈடுபட்டிருப்பதாகக் கூறி காவல்துறையினர் தற்காலிகமாக பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சி செய்து வருகின்றனர்.
இப்படி ஒரே கட்சிக்குள் இருக்கும் பொறுப்பாளர்களுக்குள்ளான இந்த கருத்து முரண்பாடு கட்சியில் உள்ள அடிப்படை தொண்டர்களின் மனநிலையை எப்படி மாற்றுகிறது என்பதற்கு இந்த நிகழ்வும் ஒரு உதாரணம். கட்சிக்கு என்று ஒரு சில கட்டுப்பாடுகள், விதிமுறைகள் உள்ளன. அவற்றை கடந்து ஒரு எம்.பி.யின் வீட்டிற்குள் சுவர் ஏறிக் குதித்து கார் கண்ணாடிகளை உடைத்து தங்களுடைய வெறுப்புணர்வை வெளிக்காட்டுவது உட்கட்சிக்குள் இருக்கும் காழ்ப்புணர்ச்சியின் அளவீட்டை அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. சற்றுப் பொறுத்திருந்து பார்ப்போம், இந்த உட்கட்சி வெறுப்பு அரசியல் யாரையெல்லாம் பதம் பார்க்கிறதோ தெரியவில்லை என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள்.