Skip to main content

சிலைகடத்தலுக்கு மூலையாக செயல்பட்ட டி.எஸ்.பி கும்பகோணத்தில் கைது!

Published on 14/09/2017 | Edited on 14/09/2017

 சிலைகடத்தலுக்கு மூலையாக செயல்பட்ட
 டி.எஸ்.பி கும்பகோணத்தில் கைது! 

அருப்புக்கோட்டையில் பறிமுதல் செய்யப்பட்ட ஐம்பொன் சிலையை நீதிமன்றத்தில்  ஒப்படைக்காமல்  வெளியில் விற்பனை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த  திருவள்ளூர் காவல் துணை காண்காணிப்பாளர் காதர்பாட்ஷாவை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் கும்பகோணத்தில் கைது செய்தனர்.
 
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள ஊரணிபுரத்தில் ஆரோக்கியராஜ் என்பவரது விவசாய நிலத்தில்   கடந்த 2008 ம் ஆண்டு பள்ளம் தோண்டும் போது  6 ஐம்பொன் சிலைகள் இருந்து கண்டெடுக்கபட்டது. அந்த சிலைகளை அருப்புக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் காதர்பாட்சா(57), ஏட்டு சுப்புராஜ்(48) ஆகியோர் பறிமுதல் செய்தனர். பறிமுதல்  செய்யப்பட்ட ஐம்பொன் சிலைகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவில்லை. இந்த சிலைகளை காதர்பாட்சாவும், சுப்புராஜூம் சேர்ந்து  சென்னை சிலைகடத்தல் மன்னன்  தீனதயாளனிடம் விலைபேசி விற்பனை செய்து விட்டனர்.
 
இந்நிலையில் தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் ஐ.ஜி யாக பொன்.மாணிக்கவேல் பொறுப்பேற்றதும், தமிழகத்தில் உள்ள சிலை கடத்தல் வழக்குகள் தோண்டி எடுக்க,  விசாரணை சூடுபிடிக்க ஆரம்பித்தது. இதையறிந்த ஆரோக்கியராஜ்  தன்னுடைய  6 ஐம்பொன் சிலைகளை காதர்பாட்சாவும், சுப்புராஜூம்  சேர்ந்து விற்பனை செய்த  தகவலை  மனுவாக எழுதி பொன்மாணிக்கவேலுக்கு  அனுப்பினர்.  இந்த புகார் மனுவை பொன்.மாணிக்கவேல் நேரிடையாகவே விசாரித்து வந்தார். 
 
இதற்கிடையில் காதர்பாட்சா பதவி உயர்வு பெற்று திருவள்ளூர் மாவட்டம் குற்ற ஆவண பிரிவு காவல் துணை கண்காணிப்பாளராகவும், சுப்புராஜ் சென்னை கோயம்பேடு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளராகவும் பணியாற்றி வந்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட சிலைகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்காமல் விற்பனை செய்த தகவலை உறுதிபடுத்திய சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு சென்னையில் சுப்புராஜை கைது செய்தனர். இதையறிந்த காதர்பாட்சா தலைமறவாகிவிட்டார்.  

 காதர்பாட்சாவை காவல் துறையினர் சஸ்பெண்ட் செய்து அவரை தேடி வந்தனர்.   வழக்கு விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. சிலை கடத்தல் வழக்குகள் மொத்தமும் கும்பகோணம் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டதை தொடர்ந்து, இந்த வழக்கையும்  கடந்த 11 ம் தேதி கும்பகோணம் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

சிலை கடத்தலுக்கு மூலையாக செயல்பட்ட டி,எஸ்,பி காதர்பாட்ஷா உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மனு செய்திருந்தார். அந்த மனு ஏற்கப்படாத  நிலையில் கும்பகோணத்தில் தலைமறைவாக இருந்தவரை தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் கைது செய்து கும்பகோணம் கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் நீதிபதி முன் ஆஜர்படுத்தினர்.  விசாரித்த நீதிபதியோ    வரும் 27 ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்திரவிட்டார்.  பிறகு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்கிடையில் கைது செய்யப்பட்டுள்ள காதர்பாட்சாவை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரணை நடத்த வேண்டும் என  தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார்  நீதிமன்றத்தில் மனு தாக்கல்  செய்ய  இருக்கின்றனர்.  கோயில் நகரமான கும்பகோணத்தில் கோயில் சிலைகடத்தல் குறித்தான  வழக்குகளும் பட்டைய கிளப்ப துவங்கியுள்ளன.

- க.செல்வகுமார்

சார்ந்த செய்திகள்