திருவண்ணாமலை அடுத்த தண்டராம்பட்டு அருகே உள்ள தென்முடியனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். அந்த ஊரில் மளிகை கடை வைத்து நடத்தி வந்தார். அவரது மனைவி கல்பனா. இவர்கள் ஆர்.கே.எஸ். என்ற பெயரில் கடந்த 20 வருடங்களாக சீட்டு கம்பெனியும் நடத்தி வந்தார்களாம். இந்த நிறுவனம் மூலம் அவர்கள் தீபாவளி சீட்டு, பொங்கல் சீட்டு, தள்ளு சீட்டு ஆகியவற்றை நடத்தி வந்ததாக சொல்லப்படுகிறது.
தீபாவளி மற்றும் பொங்கல் சீட்டு கட்டியவர்களுக்கு கவர்ச்சிகரமான பரிசுகள் வழங்கப்படும் என்ற அறிவிப்பால் ரவிச்சந்திரனிடம், தண்டராம்பட்டு வட்டம் எடத்தனூரைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவர் சீட்டு கட்டியிருந்தார். இவரைப் போலவே பலரும் சீட்டு கட்டியிருந்தனர்.
இந்நிலையில், பண்டிகை தேதி முடிந்தும் சுந்தரமூர்த்திக்கு சேர வேண்டிய சீட்டு தொகையையும், பரிசு பொருட்களையும் ரவிச்சந்திரனும், கல்பனாவும் கொடுக்காமல் தலைமறைவாகி விட்டனர். இதே போல் அவர்கள் பல பேருக்கு சீட்டு தொகையை தராமல் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து சுந்தரமூர்த்தி, திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கி.கார்த்திகேயனிடம் 12.12.2022 அன்று புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.
அதன் பேரில் குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தலிங்கம் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் கவிதா, வழக்குப் பதிவு செய்து தலைமறைவான கணவன், மனைவியை தேடி வந்தனர். இந்நிலையில் ரவிச்சந்திரனும், கல்பனாவும் திருப்பூரில் ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்ததை கண்டுபிடித்த போலீசார் அவர்களை கைது செய்தனர். போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் 1550 பேரிடம் அவர்கள் சுமார் ரூ.68 லட்சம் வரை வசூல் செய்திருப்பதாகவும், இந்த பணத்தை தங்களது பிள்ளைகளின் படிப்பு செலவிற்காகவும், சொந்த செலவிற்காகவும் செலவு செய்து விட்டதால் பணத்தை திருப்பி தரமுடியாமல் திருப்பூருக்கு தப்பி சென்று விட்டதும் தெரிய வந்தது.
கைது செய்யப்பட்ட ரவிச்சந்திரன் மற்றும் அவரது மனைவி கல்பனாவை போலீசார் கோர்ட்டு உத்தரவின் பேரில் ஜெயிலில் அடைத்தனர். தனிப்பட்ட நபரிடமோ அல்லது நிதி நிறுவனங்களிடமோ பணத்தை செலுத்தி மோசடியில் ஈடுபடும் நபர்களிடம் ஏமாற வேண்டாம் என பொதுமக்களை, மாவட்ட காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.