Skip to main content

மக்களின் சேமிப்பை சுருட்டிய நிதி நிறுவனம்! 

Published on 11/05/2022 | Edited on 11/05/2022

 

Chit Fund company closed in Ariyalur district

 

அமுதசுரபி எனப்படும் கடன் வழங்கும் கூட்டுறவு சங்கம் முன்னறிவிப்பின்றி பூட்டப்பட்டதால் டெபாசிட் செய்த மக்கள் அதிர்ச்சியடைந்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 

 

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் அமுதசுரபி எனப்படும் கடன் வழங்கும் கூட்டுறவு சங்கம் இயங்கி வந்தது. இச்சங்கத்தில் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மற்றும் உடையார்பாளையம் ஜெயங்கொண்டம் தா பழூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான வியாபாரிகள் வைப்புத்தொகை கட்டியுள்ளனர். மேலும், அப்பகுதியைச் சேர்ந்த சிறு வணிகர்கள் சாலையோர வியாபாரிகள் மற்றும் இல்லத்தரசிகள் என நூற்றுக்கணக்கானோர் தின சேமிப்பு என்ற முறையில் தினமும் அவர்களின் வருமானத்திற்கு ஏற்றவகையில் அச்சங்கத்தில் பணம் சேமித்து வந்துள்ளனர். 

 

சேமிப்பு பணத்தை வசூல் செய்வதற்காக பணியாளர்களும் சங்கத்தால் நியமிக்கப்பட்டிருந்தனர். இவர்கள் தினமும் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களின் இடத்திற்கே நேரில் சென்று பணம் வசூல் செய்வது வழக்கம். இந்நிலையில் கடந்த சில நாட்களாக வசூல் செய்வதற்கு யாரும் வராததால் இதுகுறித்து அமுதசுரபி தலைமை அலுவலகத்திற்கு பணம் செலுத்தி வந்தவர்கள் தகவல் கொடுத்தும் உரிய பதில் கிடைக்கவில்லை. 


இதனையடுத்து அலுவலகத்திற்கு நேரில் சென்று பார்த்தபோது அந்த அலுவலகம் பூட்டப்பட்டு கிடந்தது. அதனைத் தொடர்ந்து மக்கள் அந்தப் பகுதியில் விசாரித்தபோது கடந்த 10 நாட்களாக அலுவலகம் திறக்கப்படவில்லை என்று கூறியுள்ளனர். இதனால் பணம் செலுத்தியவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். டெபாசிட் செய்த பொதுமக்கள் மற்றும் தின சேமிப்பு பணம் கட்டிய வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து பாதிக்கப்பட்ட மக்கள் ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அவர்களது புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்