கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே உள்ளது முனிவாழை கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த முருகனின் மகன் கணேஷ்(14) மற்றும் செந்தில் மகன் கிருபா(13). இருவரும் அவர்களது விவசாய நிலத்தின் அருகாமையில் உள்ள பாசார் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் புறாக்கள் இருப்பதைக் கண்டு அதனைப் பிடிப்பதற்காகக் கிணற்றில் இருந்த கயிறு மூலமாகக் கீழே இறங்கிச் சென்று உள்ளனர்.
சுமார் 100 அடி ஆழம் கொண்ட கிணற்றில் இறங்கிய பின்னர், மீண்டும் மேலே ஏற முடியாமல் இருவரும் கிணற்றுக்குள் குதித்துள்ளனர். கிணற்றில் தண்ணீர் இருந்த காரணத்தினால் அதிர்ஷ்டவசமாக இருவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. பின்னர், கிணற்றுக்குள் இருந்த படியே இருவரும் நீண்ட நேரம் கத்தி கூச்சலிட்டனர். அந்த வழியாகச் சென்றவர்கள் கிணற்றுக்குள் இருந்து சத்தம் வருவதைப்பார்த்து கிணற்றில் எட்டிப்பார்க்க இரண்டு சிறுவர்கள் உள்ளே இருப்பதைப் பார்த்துக் கத்தி கூச்சலிட்டனர். அருகாமையில் இருந்தவர்கள் உடனடியாக ஓடி வந்து பார்த்தனர்.
அதன்பின் ரிஷிவந்தியம் தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினருக்குத் தகவல் கொடுத்துள்ளனர். அங்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பின்னர் இருவரையும் ஒருவர் பின் ஒருவராகக் கயிறு கட்டி பத்திரமாக மீட்டு மேலே கொண்டு வந்தனர். புறாவைப் பிடிக்க சென்ற இரண்டு சிறார்கள் கிணற்றுக்குள் சிக்கிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.