ஒடிசா மாநிலத்தில் இருந்து நேற்றிரவு நந்தினி கண்காகர் - லங்கேஸ்வர் என்ற தம்பதியர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்துள்ளனர். இவர்களுடன் 1 வயது ஆண் குழந்தையையும் உடன் அழைத்து வந்து, குழந்தையுடன் சென்ட்ரல் ரயில் நிலையத்திலேயே உறங்கி உள்ளனர். இந்த சூழலில் நள்ளிரவு 1 மணியளவில் இத்தம்பதியர் எழுந்து பார்த்தபோது தங்களது குழந்தை காணாமல் போனது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து சென்ட்ரல் ரயில் நிலைய காவல் நிலையத்தில் குழந்தை காணாமல் போனது குறித்து புகார் தெரிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் போலீசார் சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு ஆய்வு செய்தனர். அப்போது மர்ம நபர் ஒருவர் பெண் ஒருவருடன் சேர்ந்து குழந்தையை கடத்தி செல்வது தெரியவந்தது. இதனை தொடர்ந்து ஆய்வு செய்தபோது அந்த மர்மநபர் ஆட்டோவில் ஏறி சென்றதும் பதிவாகி இருந்தது. மேலும் இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஆட்டோ ஓட்டுநரிடம் விசாரித்த போது செங்குன்றத்தூரில் மர்மநபரை இறக்கி விட்டது தெரியவந்தது.
தொடர்ந்து அவர்களிடம் விசாரித்த போது குழந்தையை கடத்தியது ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பரபாஸ் மெண்டல், நமீதா என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்து குழந்தையை போலீசார் மீட்டனர். மேலும் இவர்கள் இருவரையும் கைது செய்து போலீஸ் விசாரணை செய்து வருகின்றனர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.