
தெலுங்கான முதல்வர் சந்திரசேகரராவ் இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்திருந்தார். நேற்று (13/12/21) ஹைதாரபாத்திலிருந்து திருச்சிக்கு வந்த சந்திரசேகரராவ், ஸ்ரீரங்கம் கோவில் உள்ளிட்ட சில நிகழ்வுகளுக்கு சென்று விட்டு இரவு சென்னை திரும்பினார். கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கினார்.
இன்று (14/12/21) தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்துவிட்டு மாலையில் சென்னையிலிருந்து ஹைதராபாத் திரும்புவதாக சந்திரசேகரராவின் பயணத்திட்டம் வகுக்கப்பட்டிருந்தது. அதன்படி, இன்று மாலை முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார் முதல்வர் சந்திரசேகரராவ்.
சந்திப்பு நடந்து முடிந்த நிலையில், ஹைதராபாத் செல்ல சென்னை ஏர்போர்ட் வருவதாக திட்டமிடப்பட்டது. இதற்காக அவர் செல்லும் சாலை வழி முழுவதும் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தன. விமான நிலையத்தில், அவர் செல்லும் தனி விமானமும் புறப்படுவதற்கான ஆயத்த நிலையில் இருந்தது.
தெலுங்கான மாநில அதிகாரிகள் அனைவரும் முதல்வர் சந்திரசேகரராவின் வருகைக்காக ஏர்போர்ட்டில் காத்திருந்தனர். ஆனால், திடீரென அவரது பயணம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. பயணம் ரத்து செய்யப்பட்டதற்கான உடனடி காரணங்கள் தெரியவில்லை.