தமிழகம் முழுவதும் உள்ள தாலுகா தலைமை மருத்துவமனைகள் மற்றும் துணை மாவட்ட மருத்துவமனைகளில் அவ்வப்போது ஆய்வு மேற்கொள்ள அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா கடிதம் எழுதியுள்ளார்.
தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் எழுதியுள்ள கடிதத்தில், “ஏற்கனவே அரசின் சார்பாக அனுப்பி உள்ள கடிதங்களின் படி தமிழகம் முழுவதும் உள்ள அங்கன்வாடி மையங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார மையங்களில் ஆய்வுகள் மேற்கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன். அதன்படி, நம் மாநில மக்களின் நல்வாழ்வையும் உடல்நலனையும் உறுதி செய்வதற்கான நமது கூட்டு முயற்சியில், நமது சுகாதார அமைப்புகளின் செயல்பாடுகளையும் கூர்ந்து கவனிக்க வேண்டியது மிகவும் அவசியமாகிறது. பொதுமக்களுக்குத் தேவையான சுகாதாரப் பாதுகாப்பு அளிப்பதிலும், மருத்துவ சேவைகளை விரிவுபடுத்துவதிலும் தாலுகா தலைமை மருத்துவமனைகள் மற்றும் துணை மாவட்ட மருத்துவமனைகள் முக்கியப் பங்காற்றுகின்றன. அதில், ஆரம்பநிலை மற்றும் இரண்டாம் நிலை சிகிச்சைகளுக்கு இடையே முக்கியமான இணைப்பாக இம்மருத்துவமனைகள் செயல்படுகின்றன.
இந்நிலையில், இம்மருத்துவமனைகளில் அவ்வப்போது ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியத்தையும், பராமரிப்பு மற்றும் மருத்துவ சேவை வழங்குதலில் மிக உயர்ந்த தரத்தை உறுதிசெய்ய வேண்டியதன் அவசியத்தையும் கருத்தில்கொள்ளவும். ஆய்வுகளின் போது, மருத்துவமனைகள் சிறந்த முறையில் செயல்படுவதையும், சிறந்த சேவை வழங்குவதையும் உறுதிப்படுத்த, பின்வரும் அம்சங்களில் உரிய கவனம் செலுத்தும் விதமாக, விபத்துகளுக்கான சிகிச்சைகளில் செயல்திறன் மற்றும் செயல்படும் தன்மையை மதிப்பீடு செய்து, அவசரகாலச் சூழ்நிலைகளில் சரியான நேரத்தில் மற்றும் உரிய சிகிச்சை வழங்கப்படுவதை உறுதிசெய்திட வேண்டும். வெளிநோயாளிகளின் எண்ணிக்கையைக் கண்காணித்து, வெளிநோயாளிகளின் எண்ணிக்கையைத் திறம்பட கையாள்வதற்கான மருத்துவமனையின் திறனை வெளிக் கொணருவதிலும், நிபுணத்துவ மருத்துவர்களின் இருப்பைப் பொறுத்து, மருத்துவமனையில் செய்யக் கூடிய அறுவை சிகிச்சைகளின் எண்ணிக்கையை மதிப்பாய்வு செய்து, அதை நடைமுறையில் உள்ள எண்ணிக்கையுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.
தேவையான வசதிகளை முறையாக பயன்படுத்துவது மற்றும் நோயாளிக்கு திறம்பட்ட சேவை ஆகியவற்றை உறுதிப்படுத்த படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்வதுடன், தாய்மார்களின் பிரசவங்களின் எண்ணிக்கையைக் கண்காணித்து, தாய்மார்களுக்கு வழங்கப்படும் சேவையின் தரத்தை கணக்கிடுதல் மற்றும் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைகள் செய்யப்படுவதைக் கண்காணித்து, முறையான ஆலோசனை மற்றும் சேவைகள் கிடைப்பதை உறுதி செய்திட வேண்டும். அத்துடன் பிறந்த குழந்தைகள் மற்றும் அவர்களின் தாய்மார்களுக்கு வழங்கப்படும் சேவையை மதிப்பிட்டு, சரியான மகப்பேறு சேவைக்கான நெறிமுறைகளை அறிந்துகொள்ளும் வகையில் விளக்கம் அளிப்பதையும், நோய் தடுப்புக்கான தடுப்பூசியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, தடுப்பூசி திட்டங்கள் மற்றும் அவற்றின் செயல்பாட்டினை கண்காணிக்க வேண்டும்.
இரத்த வங்கிகளில் இரத்தத்தின் போதுமான இருப்பு மற்றும் அவற்றை முறையாக மேலாண்மை செய்தல் முதலியவற்றை உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும். மேலும், நோயாளிகளுக்கு தேவையான மருந்துகளின் கையிருப்பு மற்றும் விநியோகத்தை கண்காணிக்க வேண்டும். தேவையான மருந்துகளின் சீரான விநியோகத்தை ஊக்குவித்து, பொது சுகாதாரம், துப்புரவுப் பணி, தூய்மையான கழிவறை மற்றும் தண்ணீர் இருப்பு ஆகியவற்றில் குறிப்பாக கவனம் செலுத்தி மருத்துவமனையின் உள்கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை முறையாக ஆய்வு மேற்கொள்ளவும். மின் மருத்துவ உபகரணங்களின் செயல்பாடு மற்றும் பராமரிப்பைச் சரிபார்த்து, அவை நல்ல நிலையில் இருத்தல், கொடுக்கப்பட்டிருக்கும் வழிகாட்டுதல்களின்படி, மருத்துவ கழிவுகளை சரியான முறையில் அகற்றுதலை ஆய்வு செய்ய வேண்டும்.
மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் துணை மருத்துவ பணியாளர்களின் இருப்பை மதிப்பீடு செய்து, தரமான வேவையை வழங்குவதற்கு போதுமான மருத்துவப் பணிகள் பணிபுரிதலை கண்காணிப்பதுடன் கூடுதலாக, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் செயல்பாட்டை உரிய ஆய்வு மேற்கொள்ள வேண்டும். பொது சுகாதாரம் பற்றிய மேற்காணும் ஆய்வுகளுக்கான உங்களின் அர்ப்பணிப்பானது, சந்தேகத்திற்கு இடமின்றி நம் சுகாதார அமைப்பின் தொடர்ச்சியான முன்னேற்றத்திற்கு பங்களிக்கவும், இந்த தரநிலைகளை நிலைநிறுத்துவதன் மூலம், பொதுமக்களுக்குத் தேவையான நல்வாழ்வு மற்றும் சுகாதார சேவைகளின் முன்னேற்றத்திற்கான அரசின் அர்ப்பணிப்புமிக்க பணியை நிரூபிக்க சரியான தருணமாகும். ஆய்வுகளின் அறிக்கைகள் மற்றும் விரிவான விளக்கங்களை உடனடியாக சுகாதாரம் மற்றும் குடும்ப நல முதன்மைச் செயலாளரின் கவனத்திற்குக் கொண்டுவரவேண்டும்” என தெரிவித்துள்ளார்.