ஸ்டெர்லைட்க்கு எதிரான மக்கள் போராட்டத்தில் நடந்த துப்பாக்கி சூட்டை கண்டித்து சென்னை சேப்பாக்கத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி உட்பட 15 தமிழ் அமைப்புகள் சார்பில் தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடந்து வருகின்றது.
தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட்டுக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் இதுவரை 13 பேர் இறந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் கண்டனங்கள் வலுத்து வருகின்றன. தற்போது தமிழக வாழ்வுரிமை கட்சி மற்றும் தமிழர் கலை இலக்கிய பண்பாட்டுத்துறை மற்றும் பல 15க்கு மேற்பட்ட தமிழ் அமைப்புகள் சார்பில் தலைமை செயலகத்தை முற்றுகையிடும் பேரணி நடந்து வருகின்றது.
இந்த பேரணியில் துப்பாக்கி சூட்டை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன இதில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்,நெடுமாறன், ஜான்பாண்டியன், ஆம் ஆத்மீ மாநில ஒருங்கிணைப்பாளர் வசீகரன், விவசாய சங்க தலைவர் தெய்வசிகாமணி மற்றும் பல உறுப்பினர்கள் தொண்டர்கள் என பலர் கூடியுள்ளனர்.
இந்த பேரணிக்கு சேப்பாக்கம் வரை மட்டுமே போலீசார் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது, ஸ்டெர்லைட்டை உடனே மூட உத்தரவிடவேண்டும். துப்பாக்கி சூட்டிற்கு அரசு பொறுப்பேற்க வேண்டும், காயமடைந்தவர்களை பார்க்க சென்ற அரசியல் தலைவர்கள் மீது போடப்பட்ட வழக்கை நீக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளுடன் இந்த பேரணி நடந்து வருகின்றது.