பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது மற்றும் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்குவது உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 26 ஆம் தேதி முதல் 'ஜாக்டோ ஜியோ' ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தனர். இந்த சூழலில் அமைச்சர் எ.வ. வேலு, ஜாக்டோ ஜியோ சங்க உறுப்பினர்களுடன் நேற்று (13.02.2024) ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து, அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் அறிவித்துள்ள வேலை நிறுத்தப் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கோரிக்கை வைத்திருந்தார்.
இது தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டிருந்த அறிக்கையில், 'கடந்த இரண்டு ஆண்டுகளில் அரசு ஊழியர்களின் தேவைக்கேற்ப பல்வேறு நலத்திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிதிநிலைக்கு ஏற்ப அரசு பணிவுடன் பரிசீலிக்கும். கலைஞர் வழி நடக்கும் அரசு, ஊழியர்களின் நலனை எப்போதுமே கருத்தில் கொண்டு செயல்பட்டு வருகிறது. அரசின் நலத் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் அரும்பணியை மேற்கொள்ளும் அரசு ஊழியர்களின் முக்கியத்துவத்தை அரசு உணர்ந்தே இருக்கிறது. எனவே அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள் அறிவித்துள்ள வேலை நிறுத்தப் போராட்டத்தைக் கைவிட்டு அரசுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும். அரசுக்குத் தொடர்ந்து ஒத்துழைப்பு நல்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்' எனத் தெரிவித்திருந்தார்.
அதன் பின்னர் ஜாக்டோ ஜியோ தரப்பிலிருந்து, நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவின் அறிக்கையை முற்றிலுமாக நிராகரிப்பதாகவும், தங்களின் கோரிக்கையை உடனடியாக முதல்வர் மு.க. ஸ்டாலின் நிறைவேற்ற வேண்டும் எனவும், 15 ஆம் தேதி ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் நடத்தப்படும் என்றும் பிப்ரவரி 26ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கும் என்று ‘ஜாக்டோ ஜியோ’ அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று (14.2.2024) ஜாக்டோ - ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் அன்பரசு, தியாகராஜன், வெங்கடேசன், நேரு, தியோடர் ராபின்சன், தாஸ், பொன்னிவளவன் மற்றும் நிர்வாகிகள் சந்தித்துப் பேசினர். அப்போது பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் உடனிருந்தனர். இதனையடுத்து ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். அப்போது, “கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் முதல்வரே அழைத்து பேசியதால் எங்கள் நம்பிக்கை நீர்த்துப் போகவில்லை. எனவே முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதியளித்ததன் அடிப்படையில் நாளை நடைபெற இருந்த ஜாக்டோ - ஜியோ ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஒத்திவைத்துள்ளோம் ” எனத் தெரிவித்தனர்.