மதுரை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் வைகை ஆற்றங்கரையினை மேம்படுத்தும் பணிகளை நேற்று (29/10/2021) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, அங்கு அமைக்கப்பட்டுவரும் பூங்காவில் மரக்கன்றினை நட்டு வைத்து சிறப்பித்தார்.
அதேபோல், தொண்டி சாலை மற்றும் மதுரை சுற்றுச்சாலை சந்திப்பில் கட்டப்பட்டுவரும் பல்வழிச்சாலை மேம்பாலப் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், குருவிக்காரன் சாலை சந்திப்பு பகுதியில் ஆற்றின் குறுக்கே செல்லும் தரைப்பாலத்தினை உயர்மட்டப் பாலமாக மாற்றியமைக்கும் பணிகளையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
புதுநத்தம் சாலையில் பொதுப்பணித்துறையின் நிலத்தில், நவீன வசதிகளுடன் கலைஞர் நினைவு நூலகம் அமைக்கப்பட உள்ள இடத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த நிகழ்வின்போது, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை மாநகராட்சி ஆணையர், அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.