Skip to main content

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற 20 நபர்கள்!

Published on 27/07/2021 | Edited on 27/07/2021

 

20 people who tried to set fire on them before the District Collector's Office

 

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தாலுகா சிறுவள்ளிக் குப்பம் கிராமத்தைச் சேர்ந்த பரமேஸ்வரி, அஞ்சலை, காவேரி, கன்னிகா, கௌசல்யா, தெய்வானை, மீனாட்சி, மலர் உட்பட இவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 20 பேர் நேற்று (26.07.2021) காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்டனர். திடீரென அவர்கள் தாங்கள் தயாராகக் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணெயை எடுத்து தங்கள் உடல் முழுவதும் ஊற்றிக்கொண்டு, தீ வைத்துகொள்ள முயன்றனர். அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசார் அவர்களைத் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினார்கள்.

 

அப்போது அவர்கள், “நாங்கள் சிறுவள்ளிக் குப்பம் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான இடத்தில் 25 ஆண்டுகளாக வீடு கட்டி குடியிருந்துவருகிறோம். கடந்த 2018ஆம் ஆண்டு குடியிருந்துவரும் இடத்திற்கு வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தோம். இதையடுத்து எங்களுக்குப் பட்டா வழங்குவதற்காக அந்த இடத்தை மனைப் பிரிவுகளாக அளவு செய்து வரைபடம் தயாரித்தனர். இந்த நிலையில், நாங்கள் குடியிருக்கும் வீடுகளை இடித்து காலி செய்துவிடுவதாகச் சொல்லி அரசியல் கட்சியினரின் தூண்டுதலின்பேரில் அரசு அலுவலர்கள் எங்களைத் தொடர்ந்து மிரட்டிவருகின்றனர்.

 

எனவே நாங்கள் பல ஆண்டுகளாக வசித்துவரும் அந்த இடத்திற்கு அரசு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும். இல்லையெனில் எங்களிடம் உள்ள குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றை அரசிடமே ஒப்படைத்துவிட்டு, நாங்கள் குடும்பத்தோடு அனைவரும் தற்கொலை செய்துகொள்ளப் போகிறோம். எனவே, எங்கள் குடியிருப்புகளை அகற்றும் முடிவைக் கைவிட்டு, எங்களுக்கு பட்டா வழங்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” இவ்வாறு அவர்கள் கூறினார்கள். இந்த தகவலைப் போலீசார் மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாகக் கூறினார்கள்.

 

மேலும், கலெக்டர் அலுவலகத்தில் இதுபோன்ற தவறான செயலில் ஈடுபடக் கூடாது என்று அவர்களைப் போலீசார் எச்சரித்து அனுப்பிவைத்தனர். ஒரே கிராமத்தைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட நபர்கள் தீக்குளிக்க முயன்ற சம்பவம் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்