கரூரில் இயங்கிவரும் பிரபல எலும்பு மூட்டு மருத்துவமனையில் ஊழியராக பணியாற்றிவந்த பெண் ஒருவர், தீபாவளி போனஸ் உள்ளிட்ட எந்த ஊதிய உயர்வும் கிடைக்காததால் பணியைவிட்டு நின்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், 11ஆம் வகுப்பு படிக்கும் தன்னுடைய 17 வயது மகளுக்குத் தான் வேலை பார்த்த மருத்துவமனையின் டாக்டர் ரஜினிகாந்த் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பெண் புகார் அளித்திருந்தார்.
இதனையடுத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்தனர். விசாரணையில் டாக்டர் ரஜினிகாந்த், மருத்துவமனையின் மேலாளர் சரவணன் மூலம் அந்தப் பெண்ணின் மகளான 11ஆம் வகுப்பு மாணவியை மருத்துவமனைக்கு அழைத்து தனது ரூமில் வைத்து பாலியல் தொந்தரவு செய்தது தெரியவந்தது. இதையடுத்து மருத்துவமனை மேலாளர் சரவணன் மற்றும் டாக்டர் ரஜினிகாந்த் ஆகிய 2 பேர் மீதும் கரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோவின் கீழ் வழக்குப் பதிவுசெய்தனர். பின்னர் மருத்துவமனை மேலாளர் சரவணனை போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையே, டாக்டர் ரஜினிகாந்த் தலைமறைவாகி இருந்தார். 2 தனிப்படை போலீசார் அவரை பல்வேறு இடங்களில் வலைவீசி தேடிவந்தனர். இந்தநிலையில், நேற்று (16.11.2021) இரவு அவரை வேலாயுதம்பாளையத்தில் வைத்து போலீசார் கைதுசெய்து கரூர் மாவட்ட மகிளா கோர்ட்டில் நீதிபதி முன்பாக ஆஜர்படுத்தினர். நீதிபதி அவரை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.