என்னுடன் வரும்போது தூக்கம் வராமல் இருப்பதற்கு நாசர் மாத்திரை போட்டுக்கொண்டு வருவார் என தனது அரசியல் சுற்றுப்பயணம் போது நிகழ்ந்த சில சம்பவங்கள் குறித்து தமிழக முதல்வர் பேசியுள்ளார்.
இன்று நிகழ்ச்சி ஒன்றில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ''திமுகவின் கொடியை தமிழகம் முழுவதும் அதிகம் ஏற்றியவர் யார் என்று கேட்டீர்கள் என்றால் அது கலைஞர் தான். அதற்கு ஈடாக, இணையாக திமுகவின் கொடியை அதிகம் ஏற்றிவைத்த பெருமை அவருடைய மகனாக இருக்கக்கூடிய இந்த ஸ்டாலினுக்கு தான். அப்படிப்பட்ட நிலையில் நிகழ்ச்சிகளுக்கெல்லாம் நான் போகும் பொழுதும், தமிழகத்தில் சுற்றுப்பயணங்களை மேற்கொள்ளும் பொழுதும் எனக்கு துணைக்கு யார் வருவார்கள் என்றால், ஒரு மூன்று பேர் வருவார்கள். நாசர், சிங்காரம், நாகையை சேர்ந்த அசோகன் இந்த 3 பேரும் தான் இணைபிரியாமல் எப்போதும் எங்கு சென்றாலும் போவோம்.
வேனில் செல்லும் பொழுது பக்கபலமாக, துணையாக இருப்பார்கள். இப்படியே பேசிக் கொண்டே போவோம். ஆனால் அவர்கள் துணைக்கு வருவார்களே தவிர அதிகமாக அந்த வேளையில் அதிகம் தூங்கிக் கொண்டு வருவது யார் என்று கேட்டால் நாசர் தான். இதை நான் எதற்காக சொல்கிறேன் என்றால், அவர் அடிக்கடி தூங்கிக் கொண்டு வரும் பொழுது அடித்து அடித்து எழுப்பி விடுவேன். 'எனக்கு துணைக்கு வந்தியா உனக்கு நான் துணைக்கு வந்திருக்கேனா' என அவரை எழுப்புவதுண்டு. அதனால் நாசர் என்ன பண்ணுவார் என்றால், எப்பொழுதுமே தூக்கம் வருவதற்கு தான் மாத்திரை போட்டு பார்த்திருக்கிறோம். சில உடல்நலம் சரியில்லாதவர்கள், தூக்கம் வராதவர்கள் தூக்க மாத்திரை போட்டு பார்த்திருக்கிறோம். ஆனால் நாசர் என்ன செய்வார் என்றால், தூக்கம் வராமல் இருப்பதற்கு மாத்திரை வாங்கிக் கொண்டு வருவார். அதைப் போட்டுக் கொண்டு வருவர். அப்படி இருந்தும் தூங்குவார். அப்படிப்பட்ட நிலையில் அவர்களுடன் பயணம் செய்த நிகழ்ச்சிகளை எல்லாம் நான் இன்று நினைத்துப் பார்க்கிறேன்'' என்றார்.