தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் கடந்த சில தினங்களாக விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. இத்தகைய சூழலில் ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி அருகில் நேற்று (30.11.2024) மாலை 5 மணி அளவில் கரையைக் கடக்கத் துவங்கியது. நேற்று இரவு 10.30 மணிக்கும் 11.30 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் கரையைக் கடந்துள்ளது. இது புதுச்சேரிக்கு அருகில் நிலை கொண்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி இது தொடர்ந்து மேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து அடுத்த 3 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறையக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டத்தில் 50 சென்டிமீட்டர் மழையும், புதுச்சேரியில் 46 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. இதுவே இதுவரை பதிவான மழையின் அளவுகளின் தரவுகளின் அடிப்படையில் அதிகபட்சமாகும். இந்நிலையில் புதுச்சேரியில் பல இடங்களில் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்து மழைநீர் தேங்கி நிற்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்பொழுது வரை ஃபெஞ்சல் புயல் காரணமாக புதுச்சேரியில் நான்கு பேர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்ததாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இன்று சென்னையில் பல இடங்களில் நீர் தேங்கிய பகுதிகளில் சீரமைப்பு பணிகள் நடைபெறும் நிலையில் முதல்வர் நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிலையில் மழை பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக நாளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விழுப்புரம் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Published on 01/12/2024 | Edited on 01/12/2024