தமிழக அரசின் சார்பில் தமிழ் இணையக் கல்விக் கழகம் மூலம் ‘பன்னாட்டு கணித்தமிழ் 24’ மாநாடு நேற்று முன்தினம் (08-02-24) சென்னை நந்தம்பாக்கக்கத்தில் நடைபெற்றது. இந்த மாநாடு, இரண்டு நாட்கள் நடந்து இன்றுடன் (10-02-24) முடிவடைந்துள்ளது. கடந்த 8 ஆம் தேதி நடைபெற்ற ‘பன்னாட்டு கணித்தமிழ் 24’ மாநாட்டில் தமிழக தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்துகொண்டு பேசினார்.
இந்த மாநாடு நிறைவடைந்த நிலையில், முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இது குறித்து மாநாட்டு நிறைவு விழாவில் முதல்வரின் வாழ்த்துச் செய்தியை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வாசித்தார். அதில் தெரிவித்துள்ளதாவது, “செயற்கை நுண்ணறிவு யுகத்தில் மொழித் தொழில்நுட்பத்துக்காக மாநாடு நடத்துவது தமிழ்நாடு அரசு தான். தமிழ் நெட்-99 மாநாட்டை நடத்திய கலைஞரின் நூற்றாண்டில் பன்னாட்டு கணித்தமிழ்-24 மாநாடு நடப்பது மிகச் சிறப்பானது.
முன்னை பழமைக்கும் பழமையாய் - பின்னைப் புதுமைக்கும் புதுமையாய் தமிழ்மொழி இருப்பதைவிட வேறு பெருமை வேண்டுமா? ஓலைச்சுவடி காலம் முதல் ஆண்ட்ராய்டு காலம் வரை அனைத்திலும் கோலோச்சும் மொழியாக அன்னைத் தமிழ் மொழி இருப்பது பெருமை. ஒவ்வொரு நாளும் தொழில்நுட்பம் வளர்ந்து வருகிறது. தொழில்நுட்பத்தில் மொழியின் முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது. எந்த தொழில்நுட்பம் வந்தாலும், அவை அனைத்திலும் தமிழ் வாழ வேண்டும், ஆள வேண்டும். மொழி வாழ்ந்தால் இனம் வாழும், மொழி தாழ்ந்தால் இனம் தாழும்; தமிழை வளர்த்து தமிழனை உயர்த்துவோம். இந்தியாவில் வேறு எந்த மாநிலமும் மொழிக்காக முன்னெடுக்காத பெருந்திட்டம் இந்த மாநாடு.
மொழி காக்க உயிரையே கொடுத்தவர்கள் தமிழர்கள் என்பதும் நமது வரலாறுதான். செயற்கை நுண்ணறிவு பாதையில் தமிழ் மொழியை வெற்றிகரமாகப் பயணிக்க வைக்க வேண்டும். ஆங்கிலம் போன்ற மொழிகளைப் போல தமிழில் தொழில்நுட்பச் சேவைகள் அனைத்தும் கிடைக்க அரசும் ஆவன செய்யும். உலகளாவிய நிறுவனங்கள் வெளியிடும் மென்பொருட்கள் மற்ற மொழிகளில் வெளியாகி தமிழுக்கு கால தாமதமாக வருகிறது. மென்பொருட்கள் தமிழுக்கு கால தாமதமாக வரும் இடைவெளியை குறைக்க வேண்டும். குறுஞ்செய்தி முதல் அனைத்து தொடர்புகளையும் முடிந்தவரை தமிழ் கையாண்டால் தலைமுறைகள் தாண்டியும் தமிழ் வாழும். இளைய தலைமுறையினர் அனைத்து தகவல் தொழில்நுட்பங்களிலும் தமிழை அதிகமாக பயன்படுத்த வேண்டும். ஆங்கிலம் போன்ற மொழிகளுக்கு மென்பொருட்கள் வரும்போது தமிழுக்கும் வந்தாக வேண்டும். பன்னாட்டு நிறுவனங்களுக்கு தமிழ் மொழி சார்ந்த வளத்தையும் வழிகாட்டுதல்களையும் தமிழ்நாடு அரசு வழங்கும்” என்று கூறினார்.