இந்தியா சார்பில் நிலவின் தென் பகுதியை ஆராய கடந்த ஜூலை 14 ஆம் தேதி விண்ணில் பாய்ந்த சந்திரயான் - 3 நிலவின் ஈர்ப்பு விசைக்குள் செலுத்தப்பட்டு தற்பொழுது நிலவுக்கு மிக அருகில் சென்றது. தொடர்ந்து இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில் நிலவின் தென் துருவத்தில் இறங்கி சாதனை படைத்துள்ளது சந்திரயான் - 3.
நாடு முழுவதும் இந்த வெற்றியைக் கொண்டாடி வருகின்றனர். பல்வேறு அரசியல் தலைவர்களும் பிரபலங்களும் சமூக ஊடகங்கள் வாயிலாக பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் சந்திரயான் 3 விண்கல திட்டத்தில் திட்ட இயக்குனராக பணியாற்றிய தமிழகத்தின் விழுப்புரத்தைச் சேர்ந்த விஞ்ஞானி வீரமுத்துவேலுவிற்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
இந்நிலையில் விஞ்ஞானி வீரமுத்துவேலுவை தொலைபேசியில் தொடர்பு கொண்ட தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். சந்திரயான் வெற்றி தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல உலக அளவில் இந்தியாவுக்கு பெருமை தேடித் தந்துள்ளது. விழுப்புரத்தில் உள்ள உங்கள் தந்தை மிகவும் பெருமிதம் கொண்டுள்ளதாக வீரமுத்துவேலுவிடம் தமிழக முதல்வர் பேசியுள்ளார். முதலமைச்சராக தாங்கள் என்னை தொடர்பு கொண்டு பேசியது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது என வீரமுத்துவேல் மகிழ்ச்சி அடைந்துள்ளார். தமிழ்நாட்டுக்கு வரும்போது நேரில் சந்திப்பதாக வீரமுத்துவேலிடம் முதலமைச்சர் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.