புதுச்சேரி முத்தியால்பேட்டை தொகுதி ஸ்மார்ட் சிட்டியின் அபிவிருத்தி திட்டத்தில் தேர்வாகி உள்ளது. இதனால் இந்த பகுதியில் உள்ள சாராயக்கடைகள் மூடப்படும் என புதுச்சேரி அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்நிலையில் அரசிதழை மீறி முத்தியால்பேட்டை பகுதியில் உள்ள இரண்டு சாராயக்கடைகளுக்கு முதலமைச்சரின் ஒத்துழைப்போடு கலால் துறை சார்பில் நாளை ஏலம் விடப்பட உள்ளதாகவும், இதனை உடனடியாக தடுத்து நிறுத்துமாறும் அதிமுக சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் தலைமையில், அக்கட்சியின் முத்தியால்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் வையாபுரி மணிகண்டன், முதலியார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் ஆகிய மூவரும் ஆளுநர் மாளிகையில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை சந்தித்து புகார் மனு அளித்தனர்.
புகார் மனுவை பெற்றுக் கொண்ட கிரண்பேடி விதிமுறைகளை மீறி சம்பந்தப்பட்ட சாராயக்கடைகள் ஏலம் விடுவதற்கு தான் ஒரு போதும் அனுமதிக்க மாட்டேன் என தெரிவித்ததாக தெரிவித்தனர்.
அதன்பின் சட்டப்பேரவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் அதிமுக எம்.எல்.ஏ அன்பழகன், "பிரதமர் தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் புதுச்சேரி மாநில முதல்வர் என்ற வகையில் தேவையான கருத்துக்களை முன் வைக்க நாராயணசாமி தவறிவிட்டார் எனவும் அற்ப அரசியல் காரணங்களுக்காகவும் அமைச்சரவையில் உள்ள கருத்து பிரிவினை காரணமாகவும் சிறப்பு மாநில அந்தஸ்து கோருகின்றார் எனவும் குற்றம்சாட்டினார். மேலும் தேவையில்லாமல் துணைநிலை ஆளுநரை பற்றி விமர்சிப்பதும், அதற்கு உள்துறை அமைச்சர் கண்டனம் தெரிவிப்பதும் மாநிலத்திற்கு இழுக்கு ஏற்படுத்தும் செயல்.
புதுச்சேரி மாநில உரிமைக்காகவும், பட்ஜெட்டுக்கு அனுமதி பெறவும் அனைத்துக் கட்சிகளூம் கூடி டெல்லியில் போராட்டம் செய்ய அழைப்பு விடுங்கள், ஆளுநர் மாளிகையில் தர்ணா செய்ய அழையுங்கள் என்ற அன்பழகன், மாநில பட்ஜெட்டுக்கு கூட அனுமதி பெறாமல் உள்ள நாராயணசாமி தானாக முன்வந்து முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.