தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த இக்கட்டான நிலையில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களின் பல இடங்களில் கனமழை பொழிந்து வருகிறது. நேற்று முன்தினம் (16-12-23) இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் தவித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழை எதிரொலியாகக் குடியிருப்பு பகுதிகள், சாலைகள், ரயில் நிலையம் என அனைத்து இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் டெல்லி விரைந்துள்ளார். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் அண்மையில் பெய்த மிக்ஜாம் புயல் மற்றும் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு விரைந்து நிதி ஒதுக்கக் கோரவும், தற்போது தென் மாவட்டங்களில் பெய்து வரும் அதி கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து எடுத்துக் கூறி ஆலோசிக்கவும், நாளை (19.12.2023) டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரம் கோரி கடிதம் எழுதி இருந்தார்.
இதனையடுத்து முதல்வர் மு.க. ஸ்டாலினை பிரதமர் மோடி நாளை (19.12.2023) நண்பகல் 12 மணிக்கு சந்திக்க நேரம் ஒதுக்கியுள்ளார். இதன் மூலம் நாளை பிரதமர் மோடியை முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்தித்துப் பேச உள்ளார். இந்த சந்திப்பின்போது பிரதமர் மோடியிடம் முதல்வர் மு.க. ஸ்டாலின், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகள் மேற்கொள்ள விரைந்து நிதி ஒதுக்க வலியுறுத்த உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சந்திப்புக்குப் பிறகு டெல்லியில் நாளை (19.12.2023) பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் 4வது ஆலோசனைக் கூட்டத்திலும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொள்ள உள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள், பிரதிநிதிகள் கலந்துகொள்ள உள்ளனர். அதே சமயம் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாகச் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தீவிர ஆலோசனை மேற்கொண்டார். டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக மழை வெள்ள பாதிப்பு, மீட்புப் பணிகள் மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, முதல்வரின் தனிச் செயலாளர் முருகானந்தம், உள்துறை செயலாளர் அமுதா, போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முன்னதாக டெல்லி சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை, திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆ. ராசா, தயாநிதி மாறன், திருச்சி சிவா உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழ்நாடு அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன் ஆகியோர் மலர்க்கொத்து வழங்கி சால்வை அணிவித்து வரவேற்றனர்.