தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 15ஆம் தேதி தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இத்தகைய சூழலில் தான் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் மதுரை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடந்த சில தினங்களாகக் கனமழை பெய்து வருகிறது. அதன்படி மதுரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று (25.10.2024) மதியத்தில் இருந்து பெய்துவரும் கனமழை காரணமாக வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “மதுரையில் தொடர்ந்து மழை பெய்யவில்லை. நேற்று தான் பெய்திருக்கிறது. இரவோடு இரவாக தண்ணீரை எல்லாம் எடுத்தாகிவிட்டது. உள்ளூரின் இரண்டு அமைச்சர்கள், அங்கு முகாமிட்டு வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். 8 இடங்களில் தான் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்திருக்கிறது. வேறு ஒன்றும் பிரச்சனை இல்லை.
இன்றைக்கு மழை வரும் என்று வானிலை மையம் முன்னெச்சரிக்கையாக அறிவித்திருக்கிறது. அதற்கான ஏற்பாடுகளும் நடந்துகொண்டிருக்கிறது. சென்னையில் இருந்து அதிகாரிகளை எல்லாம் அங்கு அனுப்பி வைத்திருக்கிறோம். அனைத்து நடவடிக்கைகளையும் உடனுக்குடன் நடத்துமாறு சொல்லியிருக்கிறோம். நிவாரண பணிகளும் அங்கு நடந்துகொண்டிருக்கிறது. சென்னை மட்டுமல்லாது அனைத்து ஊர்களிலும் மாநகராட்சி சார்பாக பாதாள சாக்கடை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இப்போது மழை வருவதை வைத்து அதற்கேற்றார் போல் நாங்கள் முடிவெடுப்போம்” என்று கூறினார்.
இதனையடுத்து, மகளிர் உரிமை தொகையை தற்போதைய அரசு கடன் வாங்கி தான் மாத மாதம் வழங்கி வருகிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு வைத்திருக்கிறாரே? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த முதல்வர், “அவர் சொல்லிக் கொண்டு தான் இருப்பார். அவருக்கு வேறு வேலை கிடையாது. அவர் பெயர் தினமும் பத்திரிகையில் வர வேண்டும் என்றும், அவர் முகம் அடிக்கடி டிவியில் வர வேண்டும் என்பதற்காக சொல்லிக்கொண்டு இருப்பார். அதற்காக நாங்கள் கவலைப்பட போவதில்லை” என்று கூறினார்.