சென்னை கொளத்தூர் தொகுதியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார். அவருடைய தொகுதியான குளத்தூரில் நடைபெற்று வரும் பல்வேறு நலத்திட்டப் பணிகளை பார்வையிட்ட முதல்வர், சுமார் ஒன்பது கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு திட்டங்கள் தயாரான நிலையில் அதை தொகுதி மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
தொடர்ந்து பள்ளிசாலை, வீனஸ் நகர், பெரியார் நகர் உள்ளிட்ட பல இடங்களில் தமிழக முதல்வர் ஆய்வு செய்தார். இதில் அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ஆய்விற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக முதல்வரிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை முன்வைத்தார். 'பருவ மழை காரணமாக இப்பொழுதே ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்பதாக சொல்கிறார்கள்' என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு, ''யார் சொல்கிறார்கள்'' என பதிலுக்கு முதல்வர் கேள்வி எழுப்பினார்.
'எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்' என செய்தியாளர்கள் கூறினர். அதற்கு ''எங்கே காட்டச் சொல்லுங்கள்'' என்று பதிலளித்த முதல்வர், ''எல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுத்திருக்கிறோம். அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எப்படிப்பட்ட மழை வந்தாலும் சந்திப்பதற்கு இந்த அரசு தயாராக இருக்கிறது'' என்றார்.
உடனடியாக அடுத்த கேள்வியாக 'அமைச்சர் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் வலுத்து வருகிறது. முதலமைச்சர் பரிசீலிப்பாரா? என்ற கேள்விக்கு, ''வலுத்திருக்கிறதே தவிர பழுத்திருக்கவில்லை'' என்று ரைமிங்கில் பதிலளித்தார் முதல்வர்.