கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களின் பல இடங்களில் கனமழை பொழிந்து வருகிறது. நேற்று முன்தினம் (16-12-23) இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் தவித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர் கனமழை எதிரொலியாகக் குடியிருப்பு பகுதிகள், சாலைகள், ரயில் நிலையம் என அனைத்து இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் தமிழ்நாட்டில் அரசின் சேவைகள் பொதுமக்களை விரைவாகவும் எளிதாகவும் சென்று சேர்ந்திட வழிவகுக்கும் வகையில், மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (18-12-2023) கோயம்புத்தூரில் தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, விமானம் மூலம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் டெல்லி விரைந்துள்ளார். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் அண்மையில் பெய்த மிக்ஜாம் புயல் மற்றும் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு விரைந்து நிதி ஒதுக்க கோரவும், தற்போது தென் மாவட்டங்களில் பெய்து வரும் அதி கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து எடுத்துக் கூறி ஆலோசிக்கவும், நாளை (19.12.2023) டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரம் கோரி கடிதம் எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது.