திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் கோவில்பட்டி துரைக்கமலம் அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 358 மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா, மாவட்ட ஆட்சித்தலைவர் விசாகன் தலைமையில் நடைபெற்றது. இதில் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி 358 மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.
இந்த விழாவில் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி பேசும்போது, ''முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை அறிவித்து, அந்த திட்டங்கள் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடையும் வகையில் சிறப்பான ஆட்சி நடத்தி வருகிறார்கள் குறிப்பாக கல்வித்துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். தமிழ்நாடு அரசு 2022-23 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.37,000 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது. அது போல் மாணவ, மாணவிகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக அரசுப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். அரசுப் பள்ளியில் படித்த மாணவ, மாணவிகளுக்கு மருத்துவம், பொறியியல், வேளாண்மை, கால்நடை, சட்டம் உள்ளிட்ட தொழில் பிரிவுப்பாடங்களில் படிக்க 7.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு அறிவித்து செயல்படுத்தி வருகிறார். அதன் காரணமாக தற்போது அரசு பள்ளிகளில் மாணவ, மாணவிகள் சேர்க்கை உயர்ந்து வருகிறது. 6 ம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு உயர்கல்வி படிப்புக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித் திட்டத்தை தமிழக முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் காமராஜர் ஆட்சி காலத்தில் மதிய உணவுத் திட்டம் கொண்டுவரப்பட்டது. அந்த திட்டத்தை மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் சத்துணவுத் திட்டமாக மேம்படுத்தினார். சத்துணவுத் திட்டத்தில் வாரத்தில் 5 நாட்கள் முட்டைகள் வழங்கும் திட்டத்தை கலைஞர் செயல்படுத்தினார். தற்போது, 1-ம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை படிக்கின்ற மாணவ, மாணவியர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தினை முதல்வர் அறிவித்துள்ளார். அதுபோல் பள்ளிகளுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதே தமிழக அரசின் முக்கிய நோக்கமாகும். கல்வி மேம்பாட்டிற்காக தமிழக அரசு சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களை, மாணவ, மாணவியர்கள் நல்ல முறையில் பயன்படுத்தி, நன்கு படித்து பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும் நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும்'' என்று கூறினார்.