Skip to main content

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஏமாற்றுகிறார் - கொ.ம.தே.க. ஈஸ்வரன்!

Published on 08/08/2019 | Edited on 08/08/2019

"மழைநீரை சேமிக்கின்ற மக்களின் எண்ணங்களுக்கு தமிழக அரசு ஆதரவாக இல்லை.முதலமைச்சரின் உத்தரவு ஏமாற்று வேலை" என கூறிய கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் இ.ஆர்.ஈஸ்வரன் மேலும் கூறும்போது,

"தமிழகம் முழுவதும் ஏரி, குளங்களை தமிழக அரசு தூர்வார ஆர்வம் காட்டாததால் பொதுமக்களும், அரசியல் கட்சியினரும் இணைந்து ஏரி, குளங்களை தூர்வாரி மழைநீரை சேமிக்கின்ற முயற்சிகளில் இறங்கியிருக்கிறார்கள். ஆனால் அந்த பணிகளுக்கு அரசு தரப்பில் அனுமதி அளிப்பதற்கே தாமதப்படுத்துகிறார்கள். போராடி அனுமதி பெற்றாலும் ஒத்துழைப்பு தர மறுக்கிறார்கள்.

 

eswaran

 

கோவையில் சூலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் இருக்கின்ற ஆச்சான் குளம் மிகப்பெரிய குளம். 20 கிராமங்களில் நிலத்தடிநீரை மேம்படுத்தக் கூடிய குளம். பல ஆண்டுகளாக தூர்வாராமல் கிடப்பிலே போடப்பட்டதால் மழைநீரை சேமிக்கின்ற கொள்ளளவு வெகுவாக குறைந்து போனது. பொதுமக்களின் தொடர் கோரிக்கைகளும், போராட்டங்களும் செவிடன் காதில் ஊதிய சங்கு போல ஆனது. ஒவ்வொரு தேர்தலிலும் ஆச்சான் குளம் தூர்வாரப்படும் என்பது தேர்தல் வாக்குறுதியாகவே இருந்தது. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் போதே நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜனிடம் ஆச்சான் குளத்தை தூர்வார நிதி ஒதுக்க வேண்டும் என்று கேட்டிருந்தோம். வெற்றி பெற்ற பிறகு நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜனை சந்தித்து கேட்டபோது 75 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி நானே முன்னின்று குளத்தை தூர்வாருகின்ற பணிகளை முடித்து வைக்கிறேன் என்றார். 

சொன்னபடியே ஆச்சான் குளத்திற்கு வந்து ஒரு கூட்டத்தை கூட்டி நிதி ஒதுக்குவதை பற்றியும், தூர்வாருகின்ற பணிகளை வேகப்படுத்துவது பற்றியும் அந்தப்பகுதி மக்களோடு சேர்ந்து ஆலோசித்தார். சூலூர் சட்டமன்ற உறுப்பினரும் தன்னுடைய பங்கிற்கு 10 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளாட்சித்துறை அமைச்சரை அழைத்து பணியை துவக்கி வைத்துள்ளார். அதற்கு பிறகு பொதுமக்கள் சார்பாக இயந்திரங்கள் இலவசமாக கொடுக்கப்பட்டு குளத்தை சுத்தம் செய்கின்ற பணிகள் வெகுவேகமாக நடந்தது.

வருடக்கணக்கில் வளர்ந்து கிடந்த சீமை கருவேலமரங்கள் வெகுவிரைவாக அகற்றப்பட்டன. 3 வாரத்திற்கு முன் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கலந்துகொண்ட கூட்டத்திலேயே குளத்தை எங்கெங்கே எவ்வளவு ஆழம் இருக்கிறது என்று அளவீடு செய்து திட்டமிட்டு தூர்வாரலாம் என்று ஆலோசிக்கப்பட்டது. பொதுப்பணித்துறைதான் இந்த அளவீடுகளை செய்து தூர்வாருகின்ற பணியை மேற்பார்வையிட அதிகாரம் கொண்டது. ஆனால் கடந்த 3 வாரங்களாக பொதுமக்களால் திரும்பத்திரும்ப கோரிக்கை வைத்தபோதும் அளவீடு செய்யாமல் பொதுப்பணித்துறை இழுத்தடிக்கிறது. இந்நேரம் பொதுப்பணித்துறை ஒத்துழைப்பு கொடுத்து அளவீட்டை முடித்திருந்தால் தூர்வாருகின்ற பணி வேகமாக நடந்திருக்கும். எப்படியாவது இதை தாமதப்படுத்தி மழை வரும் வரை இழுத்துவிட வேண்டுமென்ற எண்ணத்தில் தமிழக அரசு செயல்படுவதாக அந்தப்பகுதி மக்கள் சந்தேகப்படுகிறார்கள். முதலமைச்சர் ஒருபுறம் மக்கள் இயக்கம் ஆரம்பித்து ஒரு சொட்டுநீரை கூட வீணாக்காமல் சேமிப்போம் என்கிறார்.

உள்ளாட்சித்துறை அமைச்சர் விளம்பர தூதராக வந்து மழைநீர் சேகரிப்பை பற்றி தமிழக மக்களுக்கு அறிவுரை சொல்கிறார். ஆனால் அரசு எந்திரமோ மக்களே களமிறங்கி மழைநீரை சேமிக்க முயற்சித்தாலும் ஒத்துழைப்பு கொடுக்க மறுக்கிறது. தமிழகம் முழுவதும் இதேநிலைதான் என்று கேள்விப்படுகிறோம். நீர் மேலாண்மைக்கு என்று தனித்துறையை ஏற்படுத்தி தனி அமைச்சரை நியமிக்க வேண்டும். கோவை ஆச்சான் குளம் தூர்வாருகின்ற பணிகளுக்கு மக்களோடு ஒத்துழைப்பு கொடுக்க தமிழக அரசு முன்வர வேண்டும். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மக்களை ஏமாற்றும் வேலையை கைவிட வேண்டும்."என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்